Last Updated : 25 Aug, 2024 06:04 PM

3  

Published : 25 Aug 2024 06:04 PM
Last Updated : 25 Aug 2024 06:04 PM

அமெரிக்காவில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம் - தமிழ் அமைப்புகளுடன் டி.ஆர்.பி. ராஜா ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க ஆக. 27ம் தேதி இரவு, முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா புறப்படும் நிலையில், அங்கு அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக தமிழ் அமைப்புகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆலோசனை நடத்தினார்.

வரும் 2030ம் ஆண்டில் தமிழகம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு ரூ. 9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆக. 27ம் தேதி இரவு சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர் 17 நாட்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு செப்.12-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

பயணத்தின் போது, சர்வதேச அளவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யும் வகையில், முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு நடத்த உள்ளார். உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்ட இந்த பயணத்தில், முதல்வர் ஸ்டாலின் ஆக. 28ம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். அன்றைய தினம் அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். அங்கு செப். 2 ம் தேதி வரை தங்கியிருந்து முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார். தொடர்ந்து, ஆக. 31ம் தேதி புலம்பெயர்ந்த தமிழக மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

அதன்பின், செப். 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை முன்னணி நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுகிறார். அங்கு, பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார். இதற்கிடையில் செப். 7ம் தேதி அயலக தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

முதல்வரின் இந்த பயணத்திட்டத்தை முன்னிட்டு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இன்று (ஆக. 25) சிகாகோவில் உள்ள தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகளுடன் ‘சிகாகோ-அமெரிக்க தமிழர்களுடனான சந்திப்பு’ நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மேலும், அமெரிக்கா செல்லும் முதல்வருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x