Published : 25 Aug 2024 02:43 PM
Last Updated : 25 Aug 2024 02:43 PM
சென்னை: சென்னை மாகராட்சி சார்பில் கருணை அடிப்படையில் 411 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி இன்று வழங்கினார்.
சென்னை மாநகராட்சி சார்பில், மெரினா கடற்கரையை பொதுமக்கள் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக "நம்ம மெரினா நம்ம பெருமை" என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடக்க விழா, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது.
இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய 10 குழந்தை தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, மாநகராட்சியில் பணியின்போது மரணம் அடைந்த 411 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையைக் கண்காணிக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய 4 சக்கர ரோந்து வாகனங்கள் தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சத்தில் 3 ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
3.5 மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட நீர்நிலைகளில் தூர் வாரும் 2 ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் ரூ.12.97 கோடியில் வாங்கப்பட்டுள்ளன. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்ய 7 இயந்திரங்கள் 2019 ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த இயந்திரங்களின் தொடர் பயன்பாடு மற்றும் தேய்மானத்தின் காரணமாக அதன் திறன் குறைந்துள்ளது. இந்த இயந்திரங்கள் முழு திறனை பெற ஏதுவாக, முதற்கட்டமாக 2 இயந்திரங்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் (பணிகள்,) வி.சிவகிருஷ்ணமூரத்தி, மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT