Published : 25 Aug 2024 01:00 PM
Last Updated : 25 Aug 2024 01:00 PM

சென்னை தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா

விஜயகாந்த் சிலை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிலையை திறந்துவைத்துள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச.28 ஆம் தேதி காலை காலமானார். நடிகராக வளர்ந்து வந்த காலத்திலேயே தனது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கான நலத் திட்டங்களில் அதிக அளவில் முனைப்புக் காட்டியவர். ஏழை மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்ட அவர், தேவையான விஷயங்களுக்கு நிதியுதவி, நன்கொடை அளித்தல், இளைஞர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகள், இலவசத் திருமணங்கள், விளையாட்டு அகாடமி என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார்.

அரசியலில் நுழைந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவர் விஜயகாந்த். அவரது 72வது பிறந்தநாளான இன்று, சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது சிலையை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். சிலையை திறந்து வைத்த பிரேமலதா, கண் கலங்கினார். விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை முதலே ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “தேமுதிக தலைமை அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும். விஜயகாந்த் பிறந்தநாளை தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்க இருக்கிறோம். இன்று வருகின்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் பேருக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x