Published : 25 Aug 2024 12:22 PM
Last Updated : 25 Aug 2024 12:22 PM
சென்னை: மேகதாது திட்டத்தினை செயல்படுத்துவதற்கான கர்நாடக அரசின் மனுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள உரிமை என்பது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஆண்டொன்றுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டிய நீரின் அளவையும் நிர்ணயித்துள்ளது.
இந்தத் தீர்ப்பினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், உபரி நீரை மட்டுமே திறந்துவிடுவதை கர்நாடகா வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு மத்திய அரசுக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்தக் கடிதத்தில், மேகதாது அணைத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் வழங்குமாறும், மேகதாது திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எவ்விதத் தடையாணையையும் விதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில், இந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய மத்திய நீர்வள ஆணையத்திற்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டதையும் கர்நாடக அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கேற்ப நடைமுறைப்படுத்துவதுதான் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் பணி என்பதையும், மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை வாரியக் கூட்டத்தில் கலந்துரையாடியதே தவறு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இது மட்டுமல்லாமல், மேகதாது திட்டம் குறித்த வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதுகுறித்து காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் பேசியது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதற்குச் சமம். தமிழ்நாட்டினுடைய ஒப்புதல் இல்லாமல், இதுகுறித்து பேசுவதற்கு கர்நாடகத்திற்கு உரிமை இல்லை என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு முதல்வர் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களை, தமிழக விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்க முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு தனது கண்டனத்தை முதல்வர் தெரிவிக்க வேண்டுமென்றும், மேகதாது அணைத் திட்டத்தை முறியடிக்க வேண்டுமென்றும் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக டெல்டா மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேகதாது அணைத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் வழங்கக் கோரிய கர்நாடக அரசின் மனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதோடு, மேகதாது திட்டத்தினை தடுத்து நிறுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டுமென்று முதல்வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment