Published : 25 Aug 2024 12:13 PM
Last Updated : 25 Aug 2024 12:13 PM
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்குகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அங்கு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகளுக்கான பல்வேறு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. கடற்கரையை தூய்மைப்படுத்தும் வாகனங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் மற்றும் கருணை அடிப்படையில் 411 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெறுகிறது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்க உள்ளார்.
அமைச்சர் ஆய்வு: இதையொட்டி விழா ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மெரினா கடற்கரையில் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, முதல்வர் அறிவுறுத்தல்படி, மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது, பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கடற்கரையை தூய்மையாகப் பராமரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கடைகளை முறைப்படுத்துதல், மெரினா தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், மெரினாவை அழகுபடுத்த மாநகராட்சியிடம் உள்ள திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டறிந்தார்.
கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் கூறியதாவது: உலகில் நீளமான கடற்கரைகளில் மெரினாவும் ஒன்று. மெரினாவை சர்வதேச தரத்தில் அழகுபடுத்த வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.மெரினா தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்கிறோம்.
அதன் பிறகு, சர்வதேச அளவிலான கலந்தாலோசகரை நியமித்து, சுற்றுச்சூழல் விதிகளைக் கருத்தில் கொண்டு, தற்காலிக கட்டமைப்புகள் மூலம் திறந்தவெளி திரையரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், மாற்றுத் திறனாளிகள் சென்று கடல் அலையை ரசிப்பது போன்று, முதியோர் ரசிக்கவும் பிரத்யேக வசதி, இசை நீருற்று உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்குகள் முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT