Published : 25 Aug 2024 04:03 AM
Last Updated : 25 Aug 2024 04:03 AM

சென்னையில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ரூமி-1 ராக்கெட் பூமிக்கு திரும்பி சாதனை!

சென்னை: தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த மறுபயன்பாட்டுக்கான ரூமி-1 எனும் ராக்கெட் 3 சிறிய ரக செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திவிட்டு 9.8 நிமிடங்களில் மீண்டும் பூமிக்கு திரும்பியது.

விண்ணில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பின் மீண்டும் பூமிக்கு திரும்பும் ரூமி எனும் சிறிய ரக ஹைப்ரிட் ராக்கெட் ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம் மற்றும் மார்ட்டின் குழுமம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக மிஷன் ரூமி - 2024 என்ற திட்டத்தின் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு, மறுபயன்பாட்டு ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு திருப்பிக் கொண்டுவர திட்டமிடப்பட்டது.

அதன்படி 3 க்யூப் செயற்கைக்கோள்களுடன் ரூமி-1 ராக்கெட் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பட்டிபுலம் என்ற இடத்தில் இருந்து நடமாடும் ஏவுதளம் மூலமாக நேற்று காலை 7.25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி தரையில் இருந்து 35 கி.மீ. உயரத்துக்குச் சென்ற பின்னர் 3 செயற்கைக்கோள்களும் அதிலிருந்து பிரிந்துவிட்டன. அதன்பின்னர் ராக்கெட் பாராசூட் உதவியுடன் மீண்டும் தரைப் பகுதிக்கு பத்திரமாக திரும்பி சாதனை படைத்தது. இந்த ஒட்டுமொத்த பணிகளும் முடிவடைய 9.8 நிமிடங்கள் மட்டுமே ஆனது.

தற்போது ஏவப்பட்ட 3 செயற்கைக்கோள்களும் வானில் 8 மணி நேரம் வரை வலம் வந்து காஸ்மிக் கதிர்வீச்சு, புற ஊதா கதிர்வீச்சு, காற்றின் தரம், வளிமண்டல மாற்றங்கள் கண்காணிப்பு மற்றும் அவை தொடர்பான தரவுகளை சேகரிக்கும். இதுதவிர அதிர்வலைகள், ஓசோன் அளவு, காற்றின் நச்சுத்தன்மை, வளிமண்டல நிலையை அறிந்து கொள்வதற்காக 50 சிறிய ஆய்வுக் கருவிகளும் ராக்கெட்டில் அனுப்பப்பட்டன. இவை சுற்றுச்சூழல் குறித்த புரிதலை மேம்படுத்த உதவும்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் வழிகாட்டுதலில் பல்வேறு நிபுணர்களின் ஒன்றரை ஆண்டுகால உழைப்பில் ரூமி ராக்கெட் உருவானது. இந்த ராக்கெட் உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் 6,000 பள்ளி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்ராப்பு ராம்மோகன் நாயுடு காணொலி காட்சி வாயிலாக பேசும்போது, ‘‘இதற்காக கடுமையாக உழைத்த ஸ்பேஸ் ஸோன் இந்தியா விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கும், இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்த மார்ட்டின் குழுமத்துக்கும் வாழ்த்துகள்’’ என்றார்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, ‘‘இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு வந்திருப்பது நமது அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் எல்லையில்லா ஆற்றலை நிரூபிக்கிறது. விண்வெளியில் இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டுசென்ற ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம் மற்றும் மார்ட்டின் குழுமத்துக்கு எனது வாழ்த்துகள். இந்த திட்டமானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. விண்வெளி ஆய்வில் புதிய புரட்சிக்கான தொடக்கமாக இது இருக்கும்’’ என்றார்.

இந்நிகழ்வில் தமிழக சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் மேகலிங்கம், மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x