Published : 25 Aug 2024 08:24 AM
Last Updated : 25 Aug 2024 08:24 AM

தமிழகத்தில் குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி

சென்னை: குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் பேருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு விளக்கமளித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு இதுவரை 15 லட்சத்து 94,321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பயனாளிகள் குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்பட்டனர். எனவே, குடும்பஅட்டைகளின் எண்ணிக்கைமாறுபடாமல் பராமரிக்கப்பட்டதையொட்டி கடந்த ஆண்டு ஜூலை 6-ம் தேதி முதல் புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பணியும் ஏற்கெனவே நிலுவையில் இருந்த குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

ஆனாலும் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17,197குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. அதேபோன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 10,380 குடும்ப அட்டைகளும் அதே மாதம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இதற்கிடையே மக்களவைத் தேர்தல் நடைமுறை காரணமாக விண்ணப்பங்களை சரிபார்த்த மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழல் நிலவியதால், தேர்தல் முடிந்தபின் கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டன. இதுவரை பெறப்பட்ட 2 லட்சத்து 89,591விண்ணப்பங்களில் 1 லட்சத்து 63,458 புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் கள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 92,650விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளிக்கப்பட்டன. இதில் 24,657 விண்ணப்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன.

ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர விண்ணப்பங்களுக்கும் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. மீதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் தொடர்ந்து கள விசாரணையும் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியும் விரைந்து நடந்து வருகின்றன. ஆதலால், சிலர் கூறுவதுபோல் குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை. விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x