Published : 31 May 2018 07:34 AM
Last Updated : 31 May 2018 07:34 AM
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில்துறை பின்னடைவுக்கு, தொடர் போராட்டங்களும் வன்முறைகளும் முக்கிய காரணம் என்பதை எதார்த்தமாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
மக்களின் அமைதியான போராட்டங்களை சீர்குலைத்து, லாபம் தேடும் விஷமிகளை அவர் சாடியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் அவ்வாறு வன்முறை தூண்டிவிடப்பட்டதை தெள்ளத்தெளிவாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை சம்பவங்களுக்கு வெளியாட்கள் ஊடுருவலே காரணம் என்று பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டுவருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு மறுநாளே ‘தி இந்து’ நாளிதழ் இதனை சுட்டிக்காட்டியது. தமிழக முதல்வரும் தனது பேட்டியில் இதனை தெரிவித்தார்.
ரஜினி ஆணித்தரம்
தனது அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் பொதுமக்களுக்கான பிரச்சினையில் முதன்முதலாக களமிறங்கியிருக்கும் ரஜினிகாந்துக்கு தூத்துக்குடியில் பெரும் வரவேற்பு இருந்தது. பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்தபின் தனது கருத்துகளை ஆணித்தரமாக அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தரப்பு நியாயங்களையும் தெரிவித்திருக்கும் அவர், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை கடுமையாக சாடினார்.
தூத்துக்குடி போராட்டத்தில் விஷமிகள் ஊடுருவியதையும், தமிழகத்தில் அத்தகைய விஷமிகளை கட்டுக்குள் வைத்திருக்க அரசு முன்வர வேண்டும் என்ற தனது கருத்தையும் ஆணித்தரமாக தெரிவித்தார். போராட்டங்கள் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வாகிவிடாது என்பதை சுட்டிக்காட்டிய ரஜினிகாந்த், தொழில்துறையில் பின்னடைவுக்கு தேவையற்ற தொடர் போராட்டங்களும் காரணமாக இருப்பதை உணர்த்தினார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் தொழில்துறையில் மிகவும் பின்தங்கியிருப்பதை தெரிந்துகொண்டே அவர் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.
ரத்தினவேல் பாண்டியன் குழு
தென்மாவட்டங்களில் 1990-95-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஜாதிய வன்முறைகளை அடுத்து, இங்கு ஆய்வு மேற்கொண்ட நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான குழுவினர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொழில் வாய்ப்புகளை அதிகப்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தால் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அறிக்கை அளித்தனர்.
ஆனால் அந்த குழுவின் பரிந்துரைகள் எதுவும் செயலாக்கத்துக்கு வரவில்லை. நாங்குநேரியில் பல்துறை தொழில்நுட்ப பூங்காவும், கங்கைகொண்டானில் ஐ.டி. தொழில்நுட்ப பூங்காவும் கொண்டுவரப்பட்டாலும் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. இந்த தொழில்நுட்ப பூங்கா திட்டங்கள் தோல்வியில் முடிந்தன. வள்ளியூரில் சிட்கோ தொழில் எஸ்டேட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை. நவீனத்துவத்தை புகுத்தாததால் திருநெல்வேலி பேட்டையில் பாரம்பரிய நூற்பாலை மூடப்பட்டிருக்கிறது. கோபாலசமுத்திரத்தில் 2001-2006-ம் ஆண்டுக்குள் டெக்ஸ்டைல்ஸ் பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து உறுதிமொழி அளிக்கப்பட்டது. அதற்கு ஒரு சிறு துரும்பைக்கூட ஆட்சியாளர்கள் எடுத்துப்போடவில்லை.
வாக்குறுதிகள் மட்டுமே
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பாரம்பரியமிக்க பூச்சந்தை ஆண்டாண்டு காலமாக செயல்பட்டுவரும் நிலையில் அரசியலுக்காக அதற்கு போட்டியாக திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் பூச்சந்தையை கொண்டுவந்தனர். இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. பூக்கள் உற்பத்தி வெகுவாக நடைபெறும் சங்கரன்கோவில், ராதாபுரம் வட்டாரங்களில் வாசனை திரவிய ஆலை அமைக்கும் திட்டம் குறித்து தேர்தல்கள்தோறும் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன.
சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் காய்கறிகள் விளைச்சல் அதிகம். தமிழகத்திலேயே புளியங்குடியில் எலுமிச்சைக்கென்றே தனியாக சந்தை செயல்படுகிறது. களக்காடு வட்டார பகுதிகளில் வாழை விளைச்சல் அமோகம். இந்த உற்பத்தி பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு தொழில்களை தொடங்கவில்லை. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம், புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைகள் தொழில்பூங்கா திட்டங்களும் வெற்று வாக்குறுதிகளாகவே இருக்கின்றன.
ரஜினிகாந்தின் கேள்விகள்
துறைமுக நகரான தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டாலும், அவற்றில் பலவும் சுற்றுச்சூழலுக்கு வேட்டுவைக்கும் வகையில் இயங்குவதால் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பொதுமக்களின் தன்னெழுச்சியான நியாயமான போராட்டங்களும் திசைதிருப்பப்பட்டு இருக்கின்றன.
அந்த வகையில்தான் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமும் வன்முறையால் ரத்தக்கறை படிந்திருக்கிறது. வெளியாட்கள் ஊடுருவல் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ‘சமூக விரோதிகள் ஊடுருவல்’ என்றார் தமிழக முதல்வர் கே.பழனிசாமி. தற்போது, ‘விஷமிகள்’ என்று சாடியுள்ளார் ரஜினிகாந்த். தொழிற்சாலைகள் வராவிட்டால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு என்ன செய்வார்கள், வளர்ச்சி எப்படி வரும் என்ற கேள்விகளை ரஜினிகாந்த் எழுப்பியுள்ளார்.
வர மறுக்கும் ஆலைகள்
தென்மாவட்டங்களில் போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை, கோவை, மும்பை மற்றும் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில்கள் தொடங்க வந்தால், அவை சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே அமைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான மூலப்பொருட்களும் கிடைக்கக்கூடிய வசதிகள் இருந்தும் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பலவீனமாக இருக்கிறது.
விவசாயம் சுருங்கியது
தஞ்சைக்கு அடுத்ததாக நெல்விளையும் பூமியான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விளைநிலங்கள் பலவும் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்டுவிட்டன. விவசாயம் பாதியாக சுருங்கிவிட்டது. விவசாயத்துக்கும் வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இதையும் ரஜினிகாந்தின் கருத்து வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.
ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு
ரஜினிகாந்தின் கருத்துகள் தொடர்பாக தூத்துக்குடியிலுள்ள காந்திய சேவா மன்ற நிறுவனர் என்.வி.ராஜேந்திர பூபதி கூறும்போது, “ரஜினிகாந்தின் கருத்துகள் வரவேற்க கூடியவை. அவரது கருத்துப்படியே தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுவிட்டது. தாமிரபரணி தண்ணீர் கிடைக்காமல் மாவட்டத்தில் ஒரு போக சாகுபடியைக் கூட மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
“எடுத்ததுக்கெல்லாம் கொடி பிடித்து போராட்டங்களை நடத்துவதால் இங்கே தொழில்தொடங்க பலர் முன்வருவதில்லை. மேலும், உதிரி பாகங்கள் கிடைப்பதிலும் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அமைக்க முன்வராமல் இருப்பதாக” திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் பா.விநாயகமூர்த்தி கூறும்போது, “மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் திசைதிருப்பப்பட்டு விட்டது. போராட்டத்தில் வன்முறை நிகழ காவல்துறையும் காரணம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT