Published : 24 Aug 2024 08:20 PM
Last Updated : 24 Aug 2024 08:20 PM

மேகேதாட்டு திட்டத்தை தடுத்து நிறுத்த அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் துரைமுருகன் பட்டியல்

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்

சென்னை: “கர்நாடக அரசு மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய நீர்வள குழுமத்தின் பன்மாநில நதிநீர் இயக்குனகரத்தின் ஒப்புதல், வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், படுகை மாநிலங்களின் ஒப்புதல், இவை எதையும் பெறாமல் கட்ட இயலாது. கர்நாடக அரசின் இத்திட்டத்தை தடுத்து நிறுத்த, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும், சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது,” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மேகேதாட்டுஅணை பற்றி இன்று (ஆக.24) நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட மேற்கொண்டு வரும் முயற்சிகளை, தமிழக அரசு ஆரம்பம் முதலே தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது.

இவ்வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. தமிழக முதல்வர் பதவியேற்றவுடன் 17.06.2021 அன்று பிரதமருக்கு வழங்கிய கோரிக்கை மனுவிலும், 31.03.2022 மற்றும் 26.05.2022 அன்று நேரில் சந்தித்த போது வழங்கிய கோரிக்கை மனுக்களிலும், மேகேதாட்டு அணை திட்டத்தையோ அல்லது வேறு எந்த திட்டத்தையோ மேற்கொள்ள கர்நாடகாவுக்கு எவ்வித அனுமதியும் அளிக்க கூடாது என மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறும், வலியுறுத்தினார். மேலும், இப்பிரச்சினை தொடர்பாக முதல்வர், 13.06.2022 அன்று, பிரதமருக்கு ஒரு விரிவான கடிதம் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, நான் 06.07.2021 அன்று மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சரை சந்தித்து வழங்கிய கோரிக்கை மனுவில் மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுத்தியதுடன், எனது தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் குழு, மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சரை 16.07.2021 அன்று நேரில் சந்தித்து மத்திய அரசு மேகேதாட்டு அணை திட்டத்துக்கு சம்மந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமல் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தியது.

மீண்டும் நான் 05.07.2023 அன்று மத்திய ஜல்சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து 2023-2024 பாசன ஆண்டில் பிலிகுண்டுலுவில் வழங்க வேண்டிய நீரைவழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு கோரியதுடன், மேகேதாட்டு அணை திட்டத்தினை நிராகரிக்குமாறு அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறும் கோரி ஒரு கோரிக்கை மனுவை வழங்கி வலியுறுத்தினேன்.

இதனிடையே, கர்நாடக அரசு அதன் 2022-2023 நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, தமிழக சட்டமன்ற பேரவையில் கர்நாடக அரசின் இச்செயலுக்கு 21.03.2022 அன்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், இத்திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும், வலியுறுத்தி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி, அனைத்து கட்சி சட்டப்பேரவை தலைவர்கள் குழுவினை தலைமையேற்று, நான் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சரை 22.06.2022 அன்று நேரில் சந்தித்து, இது குறித்த பொருள் பற்றி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

01.02.2024 அன்று நடைபெற்ற 28-வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், நீண்ட விவாதத்துக்கு பிறகு ஆணையம் இத்திட்டத்தினை மத்திய நீர்வள குழுமத்துக்கே திருப்பி அனுப்புவதாக முடிவெடுத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், 07.02.2024 நாளிட்ட தனது கடிதங்களில் மேகேதாட்டு திட்டம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, இத்திட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட இயக்குனரகங்களுக்கு அறிவுறுத்துமாறும் மத்திய ஜல் சக்தி அமைச்சக செயலாளர், மற்றும் மத்திய நீர்வளக் குழும தலைவர் ஆகியோரை கேட்டுக்கொண்டார்.

மேலும், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக செயலாளருக்கு 07.02.2024 எழுதிய கடிதத்தில், ஏற்கெனவே 19.07.2019 அன்று நடைபெற்ற வல்லுநர்களைக் கொண்ட மதிப்பீட்டுக் குழுவின் (EAC) 25-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைக் குறிப்பிட்டதுடன், இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் குறிப்பிட்டு ToR வழங்குவதற்கான கர்நாடகாவின் எந்தவொரு கோரிக்கையையும் ஏற்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட EAC க்கு அறிவுறுத்துமாறு கோரியுள்ளார்.

இதே போன்று, தமிழக அரசின் தலைமைச் செயலரும் 20.02.2024 அன்று மத்திய ஜல்சக்தி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகங்களின் செயலர்களுக்கு எழுதிய கடிதங்களிலும், கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து, நான் 23.02.2024 அன்று மத்திய ஜல்சக்தி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், 13.12.2024 தேதியிட்ட தனது கடிதத்தில் மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை அவர்களே தெரிவித்திருப்பதை குறிப்பிட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை மேகேதாட்டு திட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டாம் என அமைச்சகத்துக்கும், மத்திய நீர்வளக் குழுமத்துக்கும் அறிவுறுத்துமாறு கோரினேன்.

இதனை தொடர்ந்து, மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நான் 05.07.2024 அன்று மத்திய ஜல்சக்தி அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து 2023-2024 பாசன ஆண்டில் பிலிகுண்டுலுவில் வழங்க வேண்டிய நீரைவழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு கோரியதுடன், மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி, இத்திட்டத்தினை நிராகரிக்குமாறு அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறும் வலியுறித்தி, மீண்டும் ஒரு கோரிக்கை மனுவை வழங்கினேன்.

மேற்குறிப்பிட்டவாறு, மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது, தமிழக அரசு சார்பாக வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும். காவிரி நடுவர் மன்றம் 05.02.2007ல் அளித்த இறுதித் தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பிலும், கர்நாடகாவில் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும், கர்நாடக அரசு இத்திட்டத்துக்கு மத்திய நீர்வள குழுமத்தின் பன்மாநில நதிநீர் இயக்குனகரத்தின் ஒப்புதல், வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், படுகை மாநிலங்களின் ஒப்புதல், இவை எதையும் பெறாமல் கட்ட இயலாது. கர்நாடக அரசின் இத்திட்டத்தை தடுத்து நிறுத்த, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும், சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x