Published : 24 Aug 2024 06:04 PM
Last Updated : 24 Aug 2024 06:04 PM
மதுரை: உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தேர்வு குறித்த பட்டியலுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ராஜ்குமார், சரவணன், சந்திரசேகர், ராஜேஷ்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்பான தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, உரிய விதிமுறைகளைப் பின்பற்றி புதிய நியமன ஆணைகளை வழங்க உத்தர விடவேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஆகஸ்ட் 21-ல் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய கோரி ஏற்கெனவே பணியாற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றனர்.
2021-ல் இந்தத் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 2023 டிசம்பரில் நடந்த அந்த வழக்கின் விசாரணையில், ‘தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தரப்பில் புதிதாக எந்த பணி நியமனங்களும் செய்யக் கூடாது. முதலில் உணவு பாதுகாப்பு அலுவலர் சேவைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பிறப்பிக்கவேண்டும். அதன்பிறகு புதிய நியமனங்கள் செய்ய வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அதனை மீறி போதிய பாதுகாப்பு வழிமுறைகள் எதையும் உருவாக்காமல் உணவு பாதுகாப்பு அலுவலர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியிடப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தொடர்பான தேர்வுப் பட்டியலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம். ஆனால், இறுதி முடிவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது” எனக் குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஆக.27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT