Published : 24 Aug 2024 05:36 PM
Last Updated : 24 Aug 2024 05:36 PM

சென்னையில் 50 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவுப் பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைக்க திட்டம்

கோப்புப் படம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் 50 மெட்ரோ நிலையங்களின் நுழைவுப் பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வு செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், மூன்று வழித்தடங்களில் ரூ.63,246 கோடி மதிப்பில் மொத்தம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதாவது, மாதவரம் – சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.), பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ)., மாதவரம் – சோழிங்கநல்லுார் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்கள் இயக்குவது மட்டுமின்றி, மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்று வழிகளில் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவுப் பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைத்து வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: “இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதிகளை இணைத்து, வணிக பகுதிகளுக்கான இடம் ஒதுக்கி, பிரத்யேக வடிவமைப்புகளில் கட்டிடங்கள் அமைக்கப்படும். இந்த இடங்களில் தனியார் அலுவலகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மொத்தம் 50 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவுப் பகுதியில் வணிக வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, ஆய்வு செய்ய 8 டெண்டர் விடப்பட்டுள்ளது. சில இடங்களில் வணிக வளாகங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வும் தொடங்கி நடைபெறுகிறது. முன்பு, மெட்ரோ ரயில் நிலையத்துடன் வணிக வளாகங்கள் ஒன்றாக சேர்த்து இருந்தன. இப்போது, மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் வணிக வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் அனைத்து சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களையும் சுற்றி வணிகவளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x