Published : 24 Aug 2024 04:29 PM
Last Updated : 24 Aug 2024 04:29 PM
சென்னை: சேலம் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக விதிகளை மீறி வெளியிட்ட டெண்டரை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் ஆன்லைன் டெண்டருக்கான அறிவிப்பு ஒன்றை கடந்த ஜூலை 22-ம் தேதியன்று வெளியிட்டார். இந்த டெண்டரில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதால் டெண்டரை ரத்து செய்யக்கோரி சேலம் பனைமரத்துப்பட்டியைச் சேர்ந்த அம்மன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரான சுபா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
அதில், ‘சேலம் நரசிங்கபுரம் நகராட்சியில் கடந்த 2022 செப்டம்பர் முதல் 2024 ஜூன் வரை கொசு ஒழிப்பு பணிக்கான டெண்டரை எடுத்திருந்த எங்களது சுயஉதவிக்குழு, அந்தப்பணியில் எந்தவொரு குறைபாடுகளும் இல்லாமல் செவ்வனே செயல்பட்டு வந்தோம். ஆனால், திடீரென நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் இந்த பணிக்காக ஆன்லைன் டெண்டரை அறிவித்தார். அதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 22-ம் தேதி முதல் பெறப்பட்டு, ஜூலை 29-ம் தேதியுடன் முடிக்கப்பட்டுவிட்டது.
ஆன்லைன் டெண்டரில் பங்கேற்க போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நகராட்சி ஆணையரை அணுகி கேட்டபோது டெண்டர் நடவடிக்கைகள் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, விதிகளை மீறி வெளியிடப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்து புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிட நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, “நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் டெண்டர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும், டெண்டர் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்காமல், 7 நாட்கள் மட்டுமே காலஅவகாசம் வழங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், டெண்டர் தொடர்பான அறிவிப்பை நகராட்சி ஆணையர் அலுவலக தகவல் பலகையிலும் வெளியிடவில்லை. இதனால் தங்களால் இந்த டெண்டரில் பங்கேற்க முடியவில்லை எனவும் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து மேலும் விதிமுறைகளின்படி புதிய டெண்டரில் பங்கேற்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கி, அதற்கான அறிவிப்பாணையை வெளியிட வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT