Published : 24 Aug 2024 01:31 PM
Last Updated : 24 Aug 2024 01:31 PM

ரூ.2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு: சீமான் தரப்புக்கு எதிராக திருச்சி எஸ்.பி. வருண்குமார் அறிவிப்பு

திருச்சி எஸ்பி வருண்குமார் | கோப்புப்படம்

திருச்சி: “ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன்.” என்று திருச்சி எஸ்பி வருண்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி எஸ்பி-யான வருண்குமாரை விமர்சனம் செய்தனர்.

இது போன்ற விமர்சனங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி-யான வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் எஸ்பி-யை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக எஸ்பி-யான வருண்குமார் இன்று (ஆக.24) தனது எக்ஸ் தளத்தில் 4 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “ஒரு சாமானிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நான் சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முனைப்புடன் செயலாற்றி வருகிறேன்.

2021-ம் ஆண்டு யூடியூபர் ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய அளவில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த யூடியூபரை கைது செய்து, பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.

சமீபத்தில், அதே யூடியூபர் பதிவு செய்த அவதூறுகளால் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த யூடியூபர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார்.

அது விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே, அதற்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் நோட்டீஸை என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன். நான் சட்டப்படி இந்த நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்துக்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.

என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம்தாழ்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது. இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும்போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், இவை அனைத்தும் போலிக் கணக்குகளாகவும் தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன. அதிலும் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிடப்பட்டதாக தெரியவருகிறது. நான் இந்த விஷயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நானும், எனது மனைவி வந்திதா பாண்டேவும் தமிழகத்தில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கிய இரு மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை) காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிகிறோம். பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. இருப்பினும் இது எங்கள் குடும்பத்தினரை பாதித்துள்ளது.

நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும், நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை.

ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும், அறச்சீற்றமும் கொள்கிறேன். ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவுக்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்னவெல்லாம் செய்வார்கள்?.

இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவுமில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்துக்கு சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும்.

ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன்பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன்.

இதுபோக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன். சமூக வலைதளங்கள் இன்று குழந்தைகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் சூழலில், நாம் அதில் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். ஆபாச பதிவுகளை நீக்காத, மன்னிப்புக் கேட்காத கூட்டத்துக்கு சட்டப்படி தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x