Published : 24 Aug 2024 12:30 PM
Last Updated : 24 Aug 2024 12:30 PM

“அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் நேரில் சென்று தொடங்கி வைக்காதது ஏன்?” - தமிழிசை

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப்படம்

கோவை: “சிறுபான்மையின மக்களின் நம்பிக்கைக்குரிய மாநாடு ஏதாவது ஒரு பகுதியில் தமிழகத்தில் நடந்தது என்றால், அங்கு முதல்வர் சென்று தொடங்கி வைக்காமல் இருப்பாரா? முதல்வர் செல்லவில்லை என்றால், உடனடியாக எழுதப்படாத துணை முதல்வர் தம்பி உதயநிதி சென்று தொடங்கி வைப்பார். எனவே, இந்த மாநாடு பெயரளவில் நடத்தப்படுகிறது. நாங்கள் தங்களது நிலைப்பாட்டில் அப்படியேதான் இருப்போம் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவையில் புதுச்சேரி, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ‘பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருவதாக’ முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஓட்டுக்காக திமுகவினர் எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள். பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடும் அதில் ஒரு உத்திதான். எனவே, அதையும் அவர்கள் செய்திருக்கிறார்கள்.

சிறுபான்மையின மக்களின் நம்பிக்கைக்குரிய மாநாடு ஏதாவது ஒரு பகுதியில் தமிழகத்தில் நடந்தது என்றால், அங்கு முதல்வர் சென்று தொடங்கி வைக்காமல் இருப்பாரா? முதல்வர் செல்லவில்லை என்றால், உடனடியாக எழுதப்படாத துணை முதல்வர் தம்பி உதயநிதி சென்று தொடங்கி வைப்பார். எனவே, இந்த மாநாடு பெயரளவில் நடத்தப்படுகிறது. நாங்கள் தங்களது நிலைப்பாட்டில் அப்படியேதான் இருப்போம் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் ஒரு அரசு ஆன்மிக மாநாடு நடத்துவது, தமிழகம் எப்போதும் ஆன்மிகத்தின் பக்கம்தான் என்பதை காட்டுகிறது. ஆன்மிகத்தை விடுத்து அரசியல் கிடையாது. அரசியலை விடுத்து ஆன்மிகம் கிடையாது என்று மகாத்மா காந்தி கூறியதைப் போல, அண்ணாவின் தமிழைப் பின்பற்றியவர்கள் ஆண்டாளின் தமிழையும் பின்பற்ற வேண்டிய காலம் வரும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.” என்று கூறினார்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக.24) காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏதோ திடீரென்று பழநியில் மாநாடு நடத்தவில்லை. பல்வேறு கோயில் திருப்பணிகளை எல்லாம் செய்துவிட்டுத்தான், பழநியில் இந்துசமய அறநிலையத்துறை இந்த மாநாட்டை நடத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு எப்போதும் திராவிட மாடல் அரசு தடையாக இருந்தது இல்லை. அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து வரும் அரசாகவும் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது” என்று பேசியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x