Last Updated : 24 Aug, 2024 11:57 AM

22  

Published : 24 Aug 2024 11:57 AM
Last Updated : 24 Aug 2024 11:57 AM

“ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது | படங்கள்: நா.தங்கரத்தினம்

பழநி: “ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக.24) காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோயில்களை பார்த்துக்கொள்ளக் கூறி அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார்” என்று புகழாரம் சூட்டினார்.

தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் (ஆக.24), நாளையும் (ஆக.25) நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத்தில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார். காலை 9 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வேல்கோட்டத்தை, சச்சிதானந்தம் எம்.பி., செந்தில்குமார் எம்எல்ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது முதல்வர் பேசியதாவது: கோயில்களை பார்த்துக்கொள்ள கூறி அறநிலையத்துறையை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார். அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் பழநியில் 58.77 ஏக்கர் நிலம் ரூ.58 கோடியில் கையகப்படுத்தப்பட உள்ளது.

அறுபடை வீடுகளிலும் ரூ.789 கோடியில் 251 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழநி முருகன் உட்பட 69 முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். கோயில் சொத்துக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அறநிலையத்துறையின் சாதனைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழக வரலாறு மட்டுமின்றி ஆன்மிக வரலாற்றிலேயே அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம் பெறும். இவ்வாறு
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திப் பேசினார்.

தொடர்ந்து நடந்த விழாவில் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலர் பி.சந்திரமோகன் வரவேற்றார். தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டை முன்னிட்டு காலை முதலே பதிவுசெய்த பங்கேற்பாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரண்டனர். கண்காட்சி அரங்கில் திருமுருகனின் ஓவிய காட்சியரங்கம், 3டி திரையரங்கம் மற்றும் விஆர் (விர்ச்சுவல் ரியலாலிட்டி) அரங்கம் மற்றும் ஆன்மிக நூல்களின் புத்தக் கண்காட்சி இடம் பெற்றிருந்தது.

மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. மாநாட்டிற்காக வந்துள்ள பக்தர்கள் டிஜிட்டல் திரையில் மாநாட்டு நிகழ்வுகளை கண்டு ரசித்த்து வருகின்றன. மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x