Published : 24 Aug 2024 04:05 AM
Last Updated : 24 Aug 2024 04:05 AM

பிரசவ காலத்துக்கு பிறகு பெண் காவலர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்களது சொந்த மாவட்டத்துக்கே பணி மாறுதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம், தமிழக முதல்வர் பதக்கம் வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

பதக்கங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது, குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் வைத்து வருகின்றனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்களது பணிமூப்புக்கு விலக்கு அளித்து, அவர்களுடைய பெற்றோர் அல்லது கணவர் வீட்டினர் வசிக்கும் மாவட்டங்களுக்கே பணி மாறுதல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்சினைகளை தீர்ப்பதில் பெண் காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர். இப்படிப்பட்ட குற்றங்களை கையாள்வதில் பெண் காவலர்களின் தொழில்முறை திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x