Published : 09 May 2018 09:56 AM
Last Updated : 09 May 2018 09:56 AM
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் சேவை கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பணம் இழப்பு ஏற்படுவதோடு, மனஉளைச்சலுக்கும் ஆளாவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொலைபேசி சேவையை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் திகழ்கிறது. தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களும், 5 லட்சம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களும் இந்நிறுவனத்துக்கு உள்ளனர். இதைத் தவிர, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மொபைல் போன் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, முகப்பேரை சேர்ந்த ஜீவா என்பவர் கூறும்போது, “நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிஎஸ்என்எல் மொபைல் சேவையைப் பயன்படுத்தி வருகிறேன். கடந்த ஒருவாரமாக பிஎஸ்என்எல் நெட்வொர்க் சேவை மிகவும் மோசமாக உள்ளது. சரியாக இணைப்பு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் எதிர்முனையில் பேசுபவரது குரல் சரியாக கேட்பதில்லை. மாறாக, என்னுடைய குரலே எனக்கு எதிரொலிக்கிறது” என்றார்.
இதே புகாரை கூறிய திருமுல்லைவாயலை சேர்ந்த கண்ணன் என்பவர், “என் மொபைல் எண்ணில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் எண்ணுக்கு போன் செய்தால் தொடர்பு கிடைப்பதில் பல சிக்கல்கள் வருகின்றன. முதலில் தொடர்பு கொள்ளும் போது, ‘அந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது’ என்றோ, ‘அந்த எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது’ என்றோ தகவல் வரும். மீண்டும் தொடர்பு கொள்ளும் போது எதிர்முனையில் உள்ளவர் போனை எடுத்து பேசினாலும் அவரது குரல் சரியாக கேட்காது. இல்லாவிட்டால் பேச்சின் நடுவிலேயே கால் டிராப் ஆகி விடுகிறது” என்றார்.
அயனாவரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறும்போது, “பலமுறை முயற்சி செய்த பிறகுதான் பிஎஸ்என்எல் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள முடிகிறது. ஒவ்வொரு முறையும் பிஎஸ்என்எல் மொபைல் எண்ணுள்ள வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள குறைந்தது நான்கைந்து முறை அழைக்க வேண்டியுள்ளதால் எனக்குத் தேவையில்லாமல் பணம் செலவாகிறது. அத்துடன், மனஉளைச்சலும் ஏற்படுகிறது” என்றார்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை பொதுமேலாளர் (மொபைல் பிளானிங்)பி.சந்தோஷத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஏர்செல் நிறுவனம் அண்மையில் மூடப்பட்டதையடுத்து, அந்நிறுவனத்தின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர். இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டும் 35 லட்சம் பேர் புதிய வாடிக்கையாளர்களாக சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக, அலைக்கற்றை (பேண்ட்வித்) அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப சர்க்யூட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தனியார் நிறுவனங்கள் தங்களிடம் புதிதாக சேர்ந்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல சர்க்யூட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக, தனியார் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளும்போது குறிப்பிட்ட அலைவரிசையில் சிக்னல் நெரிசல் ஏற்படுவதால் உடனடியாக தொடர்பு கொள்ள முடிவதில்லை. எனவே, தொடர்ந்து நான்கு, ஐந்து முறை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
அதே சமயம், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் உள்ள இரு வாடிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும்போது இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.
இவ்வாறு சந்தோஷம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT