Published : 24 Aug 2024 06:30 AM
Last Updated : 24 Aug 2024 06:30 AM

கொல்கத்தா மருத்துவர் படுகொலையை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை, மகளிர் பாசறை சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை, மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மருத்துவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கீதா, இளவஞ்சி, மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பிரகலதா உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் படுகொலை செய்யப்பட்டிருப்பது, உலக மக்கள் அனைவர் மனதையும் உலுக்கியிருக்கிறது. இச்சம்பவம் திட்டமிட்ட கூட்டு வன்புணர்வு படுகொலையாகும். நாட்டில் நடக்கும் 99 சதவீத குற்றங்கள் போதையால்தான் நடக்கின்றன.

உரிய விசாரணை முடிந்து கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட்டால்தான், அடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். அந்த வகையில் சாதி கொலைகள், பாலியல் வன்புணர்வு கொலைகளுக்கு மரண தண்டனைதான் தீர்வாக இருக்கும்.

பண்பாட்டு மரபில் தவெக கொடி: தவெக கட்சிக் கொடியில் யானை வைத்திருப்பதில் என்ன சிக்கல்? யானை என்பது தனி மனிதருக்கோ, ஒரு கட்சிக்கோ சொந்தமில்லை. எனது கட்சிக் கொடியில் புலி இருப்பதால் அது எனக்கு சொந்தமாகிவிடுமா? புறநானூற்றின்படி யானைப் படையை வைத்து போரில் வென்று, வாகை மலரை சூடுவதைத்தான் அவர் குறிப்பிட்டு வைத்திருக்கிறார். அந்த வகையில் பண்பாட்டு மரபின்படி ஒரு கொடியை அவர் வடிவமைத்திருப்பதைப் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x