Published : 24 Aug 2024 06:20 AM
Last Updated : 24 Aug 2024 06:20 AM

சென்னையில் நீர்நிலைகள் மேம்பாடு குறித்து அமெரிக்க துணை அமைச்சருடன் மாநகராட்சி மேயர் பிரியா ஆலோசனை

சென்னை: சென்னை மாநகர நீர்நிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க துணை அமைச்சர் தலைமையிலான குழுவினருடன் மாநகராட்சி மேயர் பிரியா ஆலோசனை நடத்தினார்.

பெருங்கடல்கள், சர்வதேச சுற்றுச்சூழல், அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவு துறை துணை அமைச்சர் ஜெனிஃபர் ஆர்.லிட்டில் ஜான் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புற சுற்றுச்சூழல் மேம்பாடு, நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், அமெரிக்க அமைச்சர் லிட்டில் ஜான், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹாட்ஜஸ் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

சென்னை மாநகராட்சியின் நிலப்பரப்பு, 2015 முதல் 2023 வரையிலான மழைப் பொழிவு, 2005, 2008, 2015, 2020, 2021 ஆகிய ஆண்டுகளின் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மாநகரில் உள்ள ஆறுகள், மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், நகர்ப்புற வெள்ள மேலாண்மையில் உள்ள சவால்கள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

2021-ம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், சென்னையில் அமைக்கப்படும் நீர் உறிஞ்சும் பூங்காக்கள், கூவம் ஆற்றில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணி, நீர்நிலைகளில் ஆகாயத் தாமரை மற்றும் கழிவுகளை அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், நீர்வளத் துறை தலைமை பொறியாளர் பொதுப்பணித்திலகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, மேயர், அமெரிக்க அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் நேப்பியர் பாலம் பகுதிக்கு சென்று, கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்தை பார்வையிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x