Published : 12 May 2018 09:53 AM
Last Updated : 12 May 2018 09:53 AM

ஆதார் நிரந்தர மையங்களில் பணிகள் பாதிப்பை தடுக்க புதிய பணியாளர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும்: அரசு கேபிள் டிவி நிறுவனம் யுஐடிஏஐ நிறுவனத்துக்கு கோரிக்கை

தமிழகத்தில் ஆதார் நிரந்தர மைய பணியாளர்கள் சிலரின் அங்கீகாரம் முடக்கப்பட்டது. அதனால் பணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக புதிய பணியாளர்களை நியமிக்க அனுமதி கோரி அரசு கேபிள் டிவி நிறுவனம் யுஐடிஏஐ நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் ஆதார் பதிவு மற்றும் ஆதார் எண் ஒதுக்குவது மற்றும் ஆதார் அட்டைகளை அச்சிடுவது உள்ளிட்ட பணிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை நேரடியாக மேற்கொள்ளாமல் பல்வேறு முகமைகள் மூலம் மேற்கொண்டு வருகிறது.

10 லட்சம் ஆதார் திருத்தங்கள்

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் யுஐடிஏஐ நிறுவனத்திடம் உரிமம் பெற்ற அரசு கேபிள் டிவி நிறுவனம், அதன் ஆதார் நிரந்தர மையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 19 மாதங்களில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதார் பதிவுகளும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதார் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யுஐடிஏஐ நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வில் வெற்றிபெற்ற பணியாளர்களைக் கொண்டே நிரந்தர ஆதார் மையங்களில், ஆதார் பதிவையோ, திருத்தங்களையோ மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகளை, சம்பந்தப்பட்ட பணியாளரின் கைரேகை வைத்த பின்னரே மேற்கொள்ள முடியும். ஒரு பணியாளர் ஒரு நாளில் ஒரு மையத்தில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும்.

அதை மீறி ஒரே நாளில் இரு வேறு மையங்களில் பணியாற்றினால், அவர்களுக்கு யுஐடிஏஐ நிறுவனத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

பணியாளர் அங்கீகாரம் முடக்கம்

இதற்கிடையில், ஆதார் நிரந்தர மையங்களில் விதிகளை மீறி பணியாற்றிய பணியாளர்கள் சிலரின் அங்கீகாரத்தை யுஐடிஏஐ நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு முடக்கியது. அதன் காரணமாக ஆதார் நிரந்தர மையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. முன்பதிவு செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கூட முன்பதிவுகள் நடைபெற்றன.

இந்நிலையில் யுஐடிஏஐ நிறுவனத்தால் ஏற்கெனவே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பணியாளர்களின் பட்டியலை அரசு கேபிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. அந்தப் பட்டியலில் அங்கீகாரம் முடக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளனரா என்பதை சரிபார்த்து, பணியமர்த்த தகுதியுள்ளவர்களின் பட்டியலை யுஐடிஏஐ நிறுவனம் தங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம் காத்திருக்கிறது.

49 பணியாளர்கள் பட்டியல்

இதுதொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னையில் 28 ஆதார் நிரந்தர மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 308 மையங்கள் இயங்கி வருகின்றன. அம் மைய பணியாளர்கள் சில ரின் அங்கீகாரம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக 49 பணியாளர்களின் பட்டியலை யுஐடிஏஐ நிறுவனத்துக்கு அனுப்பி இருக்கிறோம்.

நிறுவனத்தினர் அதை பரி சீலித்து, அனுமதி அளித்த பின், பணியாளர்கள் ஆதார் நிரந்தர மையங்களில் பணியமர்த்தப்படுவர்.

இன்னும் ஒரு வார காலத்துக்குள் பணியமர்த்த தகுதியுள்ள பணியாளர்களின் பட்டியல் எங்களுக்கு வந்து சேரும் என கருதுகிறோம். புதிய பணியாளர்கள் நியமனத்துக்குப் பிறகு ஆதார் பதிவில் பிரச்சினை எதுவும் இருக்காது.

இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x