Published : 23 Aug 2024 09:20 PM
Last Updated : 23 Aug 2024 09:20 PM
திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனையில், நாள் தோறும் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ காட்சிகள் குறித்து, திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கல்பனா கூறியதாவது: “ஆகஸ்ட் 22-ம் தேதி இரவு திருத்தணி பகுதியை சேர்ந்த முனியாண்டி என்ற முதியவர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டார். அவர் நீர்ச்சத்து குறைவு காரணமாக சோர்வாக இருந்ததால், உடனடியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அவரை உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிப்பதற்காக, குளுக்கோஸ் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. பிறகு, மருத்துவமனை தோட்ட பராமரிப்பு பணியாளர், முதியவரை சக்கர நாற்காலியில் உள் நோயாளிகள் பிரிவுக்கு அழைத்து சென்று, நிறுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலை இயங்க செய்தார்.
சமூக வலைதளங்களில் பரவுவது போல், நோயாளிக்கு தோட்ட பராமரிப்பு பணியாளர் குளுக்கோஸ் ஏற்றவில்லை. மேலும், செவிலியர் பற்றாக்குறை காரணமாக உள் நோயாளிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என, இரு வார்டுகளிலும் இரவு பணியில் இருந்த ஒரே செவிலியர், முதியவர் உள் நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அங்கு வந்து, மருத்துவ உதவிகளை செய்தார். பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து உள் நோயாளிகள் பிரிவுக்கு மாற்றுதல் உள்ளிட்ட நோயாளிகளை இடம் மாற்றுதல் பணிக்கு மட்டுமே தோட்ட பராமரிப்பாளர், காவலாளிகளை பயன்படுத்துகிறோம். தூய்மைப் பணியாளர்களை மருத்துவமனையின் தூய்மைப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் எக்ஸ் வலைதள பக்கத்தில், “திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் குளுக்கோஸ் ஏற்றிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே, மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிற சூழலில் தூய்மைப் பணியாளர் குளுக்கோஸ் ஏற்றியது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
அதேபோல், இரு தினங்களுக்கு முன்பு மதுரை அருகே தனக்கன்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வந்த நோயாளியிடம், ‘மருத்துவமனையில் ஊசி இல்லை, மெடிக்கலில் வாங்கி வாருங்கள்’ என வயதான மூதாட்டியை அலைக்கழித்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. இதெல்லாம் அரசின் கண்களுக்கு தெரிகிறதா? அரசு மருத்துவமனைகளை நம்பி வரும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து மருத்துவம் பார்க்காமல் அவர்களை அலைக்கழிப்பதும், தூய்மைப் பணியாளரைக் கொண்டு குளுக்கோஸ் ஏற்றுவதும் தான் ‘மக்கள் நல்வாழ்வுத் துறையின் பணியா?’
உடனடியாக, அரசு இதுகுறித்து தலையிட்டு மாவட்ட தலைநகரங்கள் மட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பிரச்சினைகளை களைந்து, மருத்துவமனைகளில் மருந்துகளின் இருப்பை உறுதி செய்து நோயாளிகளை காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT