Published : 23 Aug 2024 03:33 PM
Last Updated : 23 Aug 2024 03:33 PM
சென்னை: அதிமுக அவசர செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் பெங்களூரு வா.புகழேந்தி இன்று மனு அளித்துள்ளார்.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் கடந்த ஆக.16-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், ‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வகுத்து தரும் தேர்தல் வியூகப்படி, வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு நிர்வாகிகள் அனைவரும் பணியாற்றுவோம்’ என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளனர். இதை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்று பெங்களூரு வா.புகழேந்தி இன்று மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவின் விவரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தன்னைத் தானே பொதுச் செயலாளர் என பதில் மனுவில் குறிப்பிட்டதை தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கெனவே பழனிசாமி அனுப்பிய கட்சி தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம் அதன் கோப்புகளில் மாத்திரமே எடுத்துக் கொண்டுள்ளது. இறுதி வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைய செயலர் ஜெயதேவ் லஹரி ஆணையாக பிறப்பித்துள்ளார்.
நான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எனது மனுக்களை பெற்று பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இரட்டை இலையை பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி இருந்தாலும் அது நிரந்தரமானது இல்லை. பழனிசாமி அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டி உள்ளது சட்டத்துக்கு புறம்பான ஒன்று. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. அவரை அவரே பொதுச்செயலாளர் எனக் கூறி செயல்பட்டு வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தின் எந்த அனுமதியும் இல்லை.
பொதுச் செயலாளர் என கூறுவதன் மூலம் கட்சியை தன் வசப்படுத்தி அதன் மூலம் பலன்களை அனுபவித்து வருகிறார். தொண்டர்களையும், பொது மக்களையும் ஏமாற்றி வருகிறார். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள், குறிப்பாக பிரதான சிவில் வழக்கு ஆகியவற்றுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதை பழனிசாமி வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
ஆகவே பழனிசாமி, அவசர செயற்குழு மூலம் எடுத்த முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. பொதுச் செயலாளர் என தவறாக இவர் பயன்படுத்தி வருவதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். பழனிசாமி படத்தை அவரே போட்டுக் கொண்டு புதிய உறுப்பினர் படிவங்கள் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பதும் புதுப்பித்து வருவதும் செல்லாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT