Last Updated : 23 Aug, 2024 02:52 PM

1  

Published : 23 Aug 2024 02:52 PM
Last Updated : 23 Aug 2024 02:52 PM

“புதிய சட்டத்தால் பட்டாசுத் தொழிலை மத்திய அரசு அழித்துவிடக் கூடாது” - மாணிக்கம் தாகூர் எம்.பி

விருதுநகர்: மத்திய அரசு எந்த வகையிலும் பட்டாசுத் தொழிலை அழிக்கும் மறைமுக நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்று புதிய சட்டம் இயற்றும் முயற்சியை முன்வைத்து மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரூ.25 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்ட பணிகள் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சீனிவாசன் எம்.எல்.ஏ., ரயில்வே முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், முதுநிலை வணிக மேலாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறும்போது, “விருதுநகர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தின் முதல் கட்ட பணியாக முகப்புத் தோற்றம் அழகுபடுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகப்புப் பகுதி, பார்சல் அலுவலகம், வாகன காப்பகம் உள்ளிட்ட பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை, வரும் டிசம்பர் மாதம் முடியும். செப்டம்பர் மாதம் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்படும். மேல் தளம், லிஃப்ட், நடை மேடை விரிவாக்கம் போன்ற வசதிகள் இதில் அமையும்.

தற்போது முதல் கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. நுழைவாயில் பணிகள் முடிந்துள்ளன. மீண்டும் டிசம்பர் மாதம் ஆய்வு மேற்கொள்வோம். அதற்குள் முதல் கட்ட பணிகள் முடிக்கப்படும் என நம்புகிறோம். அதன் பின்னர், ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பிதமர் மோடி வலிமை இழந்திருக்கிறார் என்பது அவரது நடவடிக்கையிலும் பேச்சிலும் தெரிகிறது.

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனக்கு நடிப்பில்தான் விருப்பம் உள்ளதாக முகத்துக்கு நேராக கூறியுள்ளார். தைரியம் இல்லாத மோடி இதை ஏற்றுக்கொண்டு அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காமல் பயந்து நிற்கிறார். பட்டாசுக்கான வெடிபொருள் சட்டம் கி.பி. 1800-களில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை மாற்றுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது முதல்கட்ட ஆய்வில் உள்ளது.

இச்சட்டம் தொடர்பாக பட்டாசுத் தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள், பட்டாசு விற்பனையாளர்களை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும். இந்தச் சட்டம் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு எதிராக அமைந்தால் பட்டாசுத் தொழிலை காக்க வழியே இல்லை. எனவே, இச்சட்டம் முழு வடிவம் பெறுவதற்கு முன்னதாக, பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். எந்த வகையிலும் பட்டாசுத் தொழிலை அழிக்கும் மறைமுக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கக் கூடாது" என்று மாணிக்கம் தாகூர் எம்.பி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x