Published : 23 Aug 2024 12:11 PM
Last Updated : 23 Aug 2024 12:11 PM
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.6.50 கோடியில் சிசிடிவி கேமரா பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவிகளின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் திருவான்மீயூர் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் மாநகராட்சி பள்ளி வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா நிறுவப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த எண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிந்து, அடுத்த ஓரிரு மாதங்களில் சிசிடிவி கேமராக்கள், பள்ளிகளில் பொருத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT