Published : 23 Aug 2024 10:38 AM
Last Updated : 23 Aug 2024 10:38 AM
அரியலூர்: பெண் காவலர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சுபபிரியா(23) (காவலர் எண்.1680). இவர், தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை பெண் காவலராக பணியாற்றிவந்தார். இந்நிலையில், நேற்று (ஆக.22) இரவு சுமார் 8.30 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த இரட்டைவயல் கிராமத்தில் கண்ணமுடையார் அய்யனார் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பணி முடிந்து தனது தங்குமிடத்துக்கு நடந்து சென்றபோது, அவ்வழியே ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்த தண்டாயுதபாணி(42) மதுபோதையில் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நடந்து சென்ற சுபபிரியா மீது மோதியுள்ளது. இதில், தலையில் பலத்த காயமடைந்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்து, நிவாரணநிதியை நேற்று இரவு அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சுபபிரியா பணி முடிந்து செல்லும் போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
சுபபிரியாவின் உயிரிழப்பு, தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சுபபிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT