Last Updated : 28 May, 2018 08:41 AM

 

Published : 28 May 2018 08:41 AM
Last Updated : 28 May 2018 08:41 AM

பொதுமக்களிடம் புகார் மனு பெறுகிறார்களா?; அனைத்து ஆய்வாளர்களையும் கண்காணிக்கும் காவல் ஆணையர்: சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க நடவடிக்கை

பொது மக்களிடம் புகார் மனு பெறுவது தொடர்பாக சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களையும் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூர்ந்து கண்காணித்து வருகிறார்.

சென்னையில் செயின் பறிப்பு, திருட்டு உட்பட ஏராளமான குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. குற்றங்களை முழுமையாகக் குறைக்கவும், புகார்தாரர்களின் பிரச்சினைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவும் கடந்த ஆண்டு ஜுன் மாதம் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

ஆய்வாளர்களுக்கு உத்தரவு

அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காலை 11 முதல் மதியம் 12.30 மணி வரையும் இரவு 8 முதல் 9 மணி வரையிலும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் தினமும் பொது மக்களிடம் புகார் மனுக்களை கட்டாயம் பெற வேண்டும் என அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, காவல் நிலைய ஆய்வாளர்களும் புகார் மனுக்களைப் பெற்றனர். முதல் நாளில் மட்டும் 418 புகார் மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், தற்போது புகார் அளிக்கச் சென்றாலும் காவல் ஆய்வாளர்கள் சரியான நேரத்தில் காவல் நிலையத்தில் இருப்பது இல்லை, புகார் மனுக்களைப் பெறுவது இல்லை, மனுக்களைப் பெறாமல் அலைய விடுகின்றனர், கண்ணியக் குறை வாக நடந்து கொள்கின்றனர், எதிர் தரப்பிடம் ஆதாயம் பெற்றுக் கொண்டு ஒருதலைபட்சமாகச் செயல்படுகின்றனர் என்று ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, பைக் திருட்டு உள்ளிட்ட புகார் தொடர் பாக உண்மையான நிலையை பெரும்பாலும் பதிவு செய்வது இல்லை என்றும் ஆய்வாளர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கப்பட்டனர்.

புகார்தாரர்களிடம் கேள்விகள்

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 135 காவல் நிலைய சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர்களை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தற்போது கூர்ந்து கண்காணித்து வருகிறார்.

20 கேள்விகள்

அதன்படி, காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வரும் புகார்தாரர்களை நேரில் சந்திக்கும் தனிப்படையினர், ‘அவர்களிடம் சம்பந்தப்பட்ட ஆய்வாளரின் செயல்பாடு எவ்வாறு உள்ளது? போலீஸார் உங்களிடம் எப்படி நடந்து கொண்டனர்’ உட்பட 20-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு குறித்து வைத்துக் கொள்கின்றனர். விரைவில் இதன் முடிவு காவல் ஆணையருக்கு கொடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், “சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது” என காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் ஆணையர் பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “அனைத்து காவல் ஆய்வாளர்களையும் கண்காணித்து வருவது உண்மை. சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க இதுவும் ஒரு வழிமுறை” என்றார்.

ஆய்வாளர்கள் குமுறல்

ஜல்லிக்கட்டு போராட்டம், காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் போராட்டம், எதிர்கட்சிகளின் முழு அடைப்பு மற்றும் பல்வேறு பண்டிகை பாதுகாப்பு, விஐபிக்களின் பாதுகாப்பு என பல்வேறு பணிகளில் தாங்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவதால் தங்களது அன்றாடப் பணியை செய்வதில் சிக்கல் இருப்பதாக காவல் ஆய்வாளர்கள் ஒரே குரலில் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x