Published : 23 Aug 2024 08:14 AM
Last Updated : 23 Aug 2024 08:14 AM

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தவறினால் இருண்ட வரலாற்றில் இடம்பெறுவார் ஸ்டாலின்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

விழுப்புரம் / சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தவறினால், தமிழகத்தின் இருண்டவரலாற்றில் ஸ்டாலின் இடம்பெறுவார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப உள்ளதாக யுபிஎஸ்சி வெளியிட்ட விளம்பரம் சர்ச்சைக்குள்ளானது.

தொடர் எதிர்ப்பு காரணமாக இந்த விளம்பரத்தை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சி-க்கு மத்திய அரசுஉத்தரவிட்டிருக்கிறது. இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் முதல்வரின் நடவடிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன.

யாரோ சிலரை திருப்திப்படுத்துவதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று முதல்வர் கூறிவிட்டார். 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை செய்யத் தவறினால் தமிழகத்தின் இருண்ட வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் பெயர் இடம் பெற்றுவிடும்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வில் வெளிப்படைத் தன்மை வேண்டும். குரூப்-1 தேர்வில் விடைக் குறிப்பை வெளியிடவில்லை என்று மதுரை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், தேர்வு முடிவுகளை உடனுக்குடன் வெளியிட்டு, நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும். மலேசியாவில் உள்ளமலாயா பல்கலை.யில் திருவள்ளுவர் பெயரில் தமிழ் இருக்கைஅமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

கிருஷ்ணகிரியில் பாலியல்வன் கொடுமையில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் முதல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எந்த சிக்கலும், தடையும் இல்லை. செலவும் கூடுதலாக இருக்காது. எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி விவரங்களை திரட்டுவது குறித்து மத்திய அரசு சாதகமான முடிவை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x