Last Updated : 23 Aug, 2024 05:50 AM

 

Published : 23 Aug 2024 05:50 AM
Last Updated : 23 Aug 2024 05:50 AM

சென்னையில் அரங்கேறிய ‘சரணடைந்தேன் 2.0’ நாடகம்

‘டம்மீஸ்’ குழுவினரின் ‘சரணடைந்தேன் 2.O’ நாடகத்தில் ஓர் காட்சி.

சென்னை: சென்னை மயிலாப்பூர் ஃபைன்ஆர்ட்ஸ் அரங்கத்தில் கடந்த 15-ம் தேதி தொடங்கி 4 நாட்களுக்கு ‘டம்மீஸ்’ குழுவினரின் ‘சரணடைந்தேன் 2.O’ நாடகம் அரங்கேறியது.

‘எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல’ என்பதை இளைய சமுதாயத்தினரின் மனதில் பதியவைக்க வேண்டும் என்பதே நாடகத்தின் கரு. அதை பிரச்சாரமாக இல்லாமல், கலை நேர்த்தியுடன், வண்ணங்களின் சேர்க்கையோடு வழங்கினர். அழகழகான, அதேநேரம் சில காட்சிகளில் பயமுறுத்தும் ‘செட்’களின் பின்னணியில், மனதில் பதிய வைக்கிறது நாடகம்.

விரக்தியின் பிடியில் இருக்கும் ரமாமணி தற்கொலைக்கு முயல்கிறார். இதில் அவருக்கு உதவ வரும் ஒரு தூதன், அவரை‘காலாலயம்’ எனும் மர்மமானஇடத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு ரமாமணியின் எண்ணம் நிறைவேறியதா, அவருக்குஉதவிய தூதன் என்ன ஆகிறார்என்பதை விறுவிறுப்பான காட்சிகள் வழியாக புரியவைக்கிறார் இயக்குநர் ஸ்ரீவத்ஸன்.

விரக்தி, அவநம்பிக்கை, தோல்வி மட்டுமின்றி, மன மாற்றத்துக்கு பிறகு, மகிழ்ச்சியையும் முகத்தில் அற்புதமாக காண்பித்து, தனது நடிப்புத் திறனை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் ‘ரமாமணி’யாக நடிக்கும் ஐஸ்வர்யா. அவரது ரமாமணி பாத்திரமும், கிரிதரின் ‘பிராட்வே’ பாணி இசையும் முழு நாடகத்தையும் தாங்கிப் பிடிக்கின்றன.

வழக்கமாகவே ‘டம்மீஸ்’ குழுவினரின் நாடகம் என்றால், ஏதோ ஒன்றரை மணி நேர பொழுதுபோக்கு என்று இல்லாமல், நகைச்சுவை, ஆன்மிகம், மனிதநேயம், விருந்தோம்பல், அறிவியல் என எடுத்துக் கொண்ட கருத்துக்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் இருக்கும். ‘சரணடைந்தேன்’ நாடகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x