Last Updated : 08 May, 2018 09:58 AM

 

Published : 08 May 2018 09:58 AM
Last Updated : 08 May 2018 09:58 AM

மின் வாரிய அலுவலகங்களில் உள்ள மின் கட்டண கவுன்ட்டர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு: மின்னணு பரிவர்த்தனை ஊக்குவிப்பு

மின்னணு பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மின் வாரியங்களில் நேரடியாக பணம் செலுத்தும் கவுன்ட்டர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை அலுவலகங்களில் நேரடியாக செலுத்துவதற்கான கவுன்ட்டர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியது: மின் நுகர்வோர் முன்பெல்லாம் கட்டணத்தை மின் வாரிய அலுவலகங்களில் மட்டுமே செலுத்தி வந்தனர். இதற்காக, தமிழகம் முழுவதும் 3,500 மையங்களில் 5,000 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டன. மின் கட்டணங்களை மின் வாரிய இணையதளம் வழியாக ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்பிறகு அஞ்சல் நிலையங்கள், அரசு இ-சேவை மையங்கள், ஏடிஎம் மையங்கள், 18 பொதுத்துறை, தனியார் வங்கிகளின் கிளைகள், மொபைல் ஆப் ஆகியவற்றின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றில் பணம், வரைவோலை (டிடி), டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம். தற்போது, பணப் பரிவர்த்தனைகளை மின்னணு முறையில் (டிஜிட்டல்) மேற்கொள்ள மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால், பணத்தை பாதுகாப்பாக கையாளுவதுடன், முறைகேடுகளைத் தடுக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை ஆன்லைன், மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்த மின் வாரியம் ஊக்கப்படுத்தி வருகிறது. தற்போது 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை ஆன்லைன், வங்கிகள் மூலம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

எனவே, கவுன்ட்டர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மையத்தில் 3 அல்லது 4 கவுன்ட்டர்கள் இருந்தால் தேவைக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படும். அதேநேரத்தில், ஒரே கவுன்ட்டர் உள்ள மையங்கள் மூடப்படாது. மூடப்படும் கவுன்ட்டர்களில் பணியில் உள்ள ஊழியர்கள் வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர். இதனால், மின் வாரியத்துக்கு செலவு மிச்சமாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x