Published : 23 Aug 2024 12:05 AM
Last Updated : 23 Aug 2024 12:05 AM
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மங்களகரமாக உள்ளது என பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது.
“புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு எனது வாழ்த்து. யார் வேண்டுமானாலும் பொது வாழ்க்கைக்கு வரலாம். மக்களுக்கு சேவை செய்யலாம். அந்த சேவை முழுமையானதாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. தம்பி விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விமர்சையாக கொடி ஏறினால் விமர்சனங்களும் வரும். அந்த வகையில் கொடி ஏற ஏற விமர்சனமும் ஏறிக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான அரசியல் சூழல்தான். விமர்சனம் இல்லாமல் ஒரு கட்சி வளர முடியாது. அந்தக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை மற்றும் வாகை மலர் மீது விமர்சனம் வந்துள்ளது.
கொடியில் யானை இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்தக் கொடியில் தாமரை மலர் இடம் பெற்று இருந்தால் நாங்களும் விமர்சித்திருப்போம். பொதுவாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து, அவர்களின் கொள்கை என்னவென்ன தெரிந்த பிறகுதான் விமர்சனம் வரலாம். இங்கு கொடியே விவாத பொருளாகி உள்ளது.
எது எப்படி இருந்தாலும் அந்தக் கொடி மங்களகரமாக உள்ளது. குங்குமமும், மஞ்சளுமாக அந்தக் கொடி இருப்பது எனக்கு மகிழ்ச்சி” என தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை - பனையூரில் வியாழக்கிழமை காலை தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி மற்றும் பாடலை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். அப்போது முதல் அது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT