Published : 22 Aug 2024 09:43 PM
Last Updated : 22 Aug 2024 09:43 PM
கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்துள்ள நடிகர் விஜய்க்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி இன்று (ஆக.22) நடந்தது. கைத்தறி ஆடைகளை அணிந்தபடி மாணவ, மாணவிகள் அணிவகுப்பில் பங்கேற்றனர். பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் நடிகை நமீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். முன்னதாக இருவரும் மாணவ, மாணவிகளுடன் இணைந்து ஆடை அணிவகுப்பில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியது: “கைத்தறி நெசவு குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 7-வது ஆண்டாக கைத்தறி நெசவு ஆடை அணிவகுப்பு போட்டிகளை நடத்தியுள்ளோம். கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும், கைத்தறி நெசவு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆண்டுதோறும் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில் பங்கேற்கும் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். தமிழகம் இதுபோன்ற நூற்றுக்கணக்கான கொடிகளையும், தலைவர்களையும் பார்த்துள்ளது. கோவையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட போதும் தற்போது பணிகள் முடிக்கப்பட்டு திமுக அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கோவைக்கு செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT