Published : 22 Aug 2024 09:05 PM
Last Updated : 22 Aug 2024 09:05 PM

சத்தியஞான சபைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண சிறப்புக் குழு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அடையாளம் காண சிறப்புக்குழுவை ஒரு மாதத்தில் அமைகக் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் வடலூரில் ரூ. 99 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகரமைப்பு திட்ட அனுமதி என அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சத்திய ஞான சபை அமைந்துள்ள பெருவெளித்தளம் வழிபாட்டுக்குரிய இடம் என்பதால் அங்கு எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதை ஒருதரப்பு குற்றச்சாட்டாக முன்வைக்கக் கூடாது. அதில் உள்நோக்கம் உள்ளது. அங்கு குடிநீர், கழிப்பிடம், பக்தர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மாநில அரசின் பொறுப்பு மட்டுமல்ல கடமை. சத்திய ஞான சபைக்கு பக்தர்கள் 106 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அரசு தரப்பில் 71 ஏக்கர் மட்டுமே இருப்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “கடந்த 1938-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை இந்த வழிபாட்டுத் தலத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்தபோது 71 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. ஆனால் கோயில் ஆவணங்களின்படி 79 ஏக்கர் என உள்ளது. 6.75 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இத்தலத்துக்கு சொந்தமாக வேறு ஏதேனும் நிலம் இருப்பது கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதல் காரணமாகவே அங்கு வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது,” என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், சத்திய ஞான சபைக்கு சொந்தமாக 106 ஏக்கர் நிலம் உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும். மேலும் சத்திய ஞான சபை மீது அக்கறை உள்ளவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்.5-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x