Last Updated : 22 Aug, 2024 05:17 PM

 

Published : 22 Aug 2024 05:17 PM
Last Updated : 22 Aug 2024 05:17 PM

குமரி: மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட மோதிரமலை - குற்றியாறு மாற்றுப்பாதை சீரமைப்புப் பணி தீவிரம்

மோதிரமலை - குற்றியாறு வழித்தடத்தில் மாற்றுப்பாதை சீரமைக்கும் பணி தீவிரம்.

நாகர்கோவில்: குமரி மலையோரங்களில் பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்ட மோதிரமலை - குற்றியாறு செல்வதற்கான மாற்றுப்பாதையை உடனடியாக சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் சில நீர்நிலைகள் பழுதடைந்து வருகின்றன. குறிப்பாக மோதிரமலை - குற்றியாறு பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை பழுதடைந்து, பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக இல்லை. இதனால் 15-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பழுதடைந்த பாலப் பணிகளை தாமதமின்றி முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

கோதையாறு செல்லும் சுமார் 15 கி.மீ நீளமுடைய சாலையில் இடதுபுறம் பிரிந்து செல்லும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இச்சாலை வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான கோதையாறு மின் உற்பத்தி உலைகளில் இரண்டாவது உலை இச்சாலையில் இடதுபுறம் அமைந்துள்ளது. அரசு ரப்பர் கழகம், மின் உற்பத்தி கழக அலுவலர்கள் மற்றும் முடவன்பொத்தை, மாங்காமலை, விலாமலை, தச்சன்மலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இச்சாலையை பயன்படுத்துகிறார்கள்.

வனப்பகுதிக்குள் ஏற்கெனவே அமைந்துள்ள தரைப்பாலம் 31.45 மீட்டர் நீளமுடையது. இந்த தரைபாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாலும் மழைக்காலங்களில் வெள்ளம் வடிய ஒரு வார காலத்திற்கு மேல் ஆவதாலும் இதனால் இப்பகுதி மக்களுக்கு வேறு மாற்றுப் பாதை இல்லாததாலும் இந்தத் தரைப்பாலத்தினை 16.6 மீட்டர் நீளத்தில் மூன்று கண்கள் கொண்ட உயர்மட்ட பாலமாக மாற்ற ரூ.5 கோடி மதிப்பீட்டில் வனத்துறை அனுமதியுடன் பணிகள் நடந்து வந்தது.

இந்தப் பாலப்பணியின்போது மக்கள் சென்று வர ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக மாற்றுப்பாதை மலைப்பகுதியில் நேற்று அதிகாலை பெய்த கனமழையினால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மாற்றுப்பாதை மற்றும் காங்கிரீட் குழாய்கள் அடித்து செல்லப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக மாற்றுப்பாதை அமைக்க உத்தரவிடப்பட்டது.அதனடிபடையில் நெடுஞ்சாலை துறையினரால் ஆற்றில் வெள்ளம் குறைந்தவுடன் சேதமடைந்த மாற்று பாதையினை சரி செய்யும் பணிகள் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதை பணியில் ஏற்கெனவே அடித்துச்செல்லப்பட்ட குழாய்களுக்கு பதிலாக புதியதாக குழாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன இப்பணியினை வருகிற 24-ம் தேதிக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடபட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x