Published : 22 Aug 2024 12:59 PM
Last Updated : 22 Aug 2024 12:59 PM
சென்னை: இனி தமிழக மக்களுக்காக உழைக்க வேண்டும் என கொடி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் நிர்வாகிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறுவுறுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.15 மணிக்கு விழா மேடைக்கு விஜய் வருகை தந்தார். அவர், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் நிர்வாகிகளை வரவேற்றார்.
தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரையாற்றினார். பின்னர் கட்சித் தலைவர் விஜய் கூற நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து கட்சிக் கொடியை மேடையில் விஜய் அறிமுகம் செய்தார். சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறத்தில் இரு போர் யானைகள் மற்றும் வாகை மலர், நட்சத்திரம் ஆகியன இடம்பெற்றிருக்கும் வகையில் கொடி உருவாக்கப்பட்டிருந்தது.
பின்னர், கட்சித் தலைமையகத்தில் கொடி கம்பத்தில் 9.30 மணியளவில் கொடியை ஏற்ற தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பின்னர் கட்சியின் கொடி பாடல் திரையிடப்பட்டது. அப்போது விஜய் மற்றும் ஆனந்த் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் கண் கலங்கினர். தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என தொடங்கிய பாடலின் திரையிடல் முடிந்ததும் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.
விழாவில் விஜய் பேசியதாவது: “இன்று நம் எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷமான ஒரு நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி அதன் தொடக்க புள்ளியாக கட்சியின் பெயரை பிப்ரவரி மாதம அறிவித்தேன் அன்றிலிருந்து குறிப்பிட்ட ஒரு நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்திருந்தீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. ஆம் நம் முதல் மாநில மாநாடு. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
சீக்கிரமே மாநாடு என்றைக்கு நடக்கிறது எப்போது என்பதெல்லாம் நான் அறிவித்து விடுவேன். அதற்கு முன் நீங்கள் எல்லாருமே கொண்டாடி மகிழ்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் முன்னாலும் சரி கொடியை அறிமுகப்படுத்துவதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.
இதுவரைக்கும் நாம் நமக்காக உழைத்தோம், இனி வரப்போகும் காலத்தில் கட்சி ரீதியாக நம்மை தயார்ப்படுத்தி தமிழகத்துக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து உழைப்போம்.
புயலுக்கு பின் அமைதி ஆர்ப்பரிப்பு ஆரவாரம் இருப்பது போல் நம் கொடிக்கு பின்னாலும் ஒரு வரலாற்று குறிப்பு ஒன்று இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒரு நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னேன் அல்லவா அன்றைக்கு நம்முடைய கொள்கைகள் என்ன? நம்முடைய செயல் திட்டங்கள் என்ன? என சொல்லும்போது அன்றைக்கு இந்த கொடிக்கான விளக்கத்தையும் சொல்கிறேன். அதுவரை இந்த கொடியை ஒரு சந்தோஷமா, ஒரு கெத்தா, நாம் ஏற்றிக் கொண்டாடுவோம்.
இதை கட்சிக் கொடியாக நான் பார்க்கவில்லை. தமிழகத்தின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கான ஒரு கொடியாகவே பார்க்கிறேன். இதனை உங்கள் உள்ளத்திலும் உங்கள் இல்லத்திலும் நான் சொல்லாமலேயே ஏற்றி விடுவீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
இருந்தாலும் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று விதிகளை கடைபிடித்து அனைவரிடமும் தோழமை பாராட்டி கொடியை ஏற்று கொண்டாடுவோம். அதுவரைக்கும் தன்னம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” இவ்வாறு விஜய் பேசினார். நிகழ்ச்சியில் பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT