Published : 22 Aug 2024 12:02 PM
Last Updated : 22 Aug 2024 12:02 PM
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஆக.22) அறிமுகம் செய்து ஏற்றினார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயக்குமார்: பொதுவாகவே ஒரு கட்சி ஆரம்பித்தால் கொடி அறிமுகம், மாநாடு ஆகியவை தொடர்ச்சியாக நடக்கும் விஷயங்கள்தான். அந்த அடிப்படையில், இன்று தவெக கொடியை அதன் தலைவர் விஜய் அறிமுகம் செய்துள்ளார். எந்த ஒரு கட்சியுமே பிறரை வீழ்த்திவிட்டு தான் மேலே வரவேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில்தான் அந்த பாடலில் எதிர்களை வீழ்த்துவது போல வைக்கப்பட்டிருக்கலாம். ஜனநாயக நாட்டில் இறுதி எஜமானர்கள் மக்கள்தான். எதுவாக இருந்தாலும் மக்கள்தான் முடிவு செய்வார்கள். மாநாட்டில் விஜய் என்ன பேசுகிறார் என்பதை வைத்துதான் எதுவாக இருந்தாலும் சொல்லமுடியும்.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்: ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்குவது ஜனநாயக உரிமை. விஜய் எதை சாதிக்க நினைக்கிறாரோ அந்த நோக்கத்தில் அவர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறென். அவருடைய கொள்கை கோட்பாடுகள், நடைமுறைகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டபிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். திமுக எந்த சூழ்நிலையிலும் இதை ஒரு போட்டியாக நினைக்கவில்லை. இந்த மண்ணில் திராட இயக்கங்களின், பெரியாரின் தத்துவத்தை கொண்டு தான் ஒரு இயக்கம் முன்னேற முடியும் என்று விஜய் உணர்ந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியை தருகிறது.
செல்வப்பெருந்ததகை: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தங்கள் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய விஜய்க்கு எங்களுடைய வாழ்த்துகள். விஜய்யின் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
முன்னதாக, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை விஜய் அறிமுகம் செய்து ஏற்றி வைத்தார். இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தவெக தொண்டர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி பினவருமாறு: “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” இவ்வாறு அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT