Published : 22 Aug 2024 10:34 AM
Last Updated : 22 Aug 2024 10:34 AM

“அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி” - தவெக கொடிப் பாடல் எப்படி?

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார்.

சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொடிப் பாடலையும் விஜய் வெளியிட்டார். இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளதாகவும், விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாடல் எப்படி? - முழுக்க 3டி கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடலின் தொடக்கத்தில் யானைகள் மீது அமர்ந்தபடி சிலர் மக்களை துன்புறுத்துகின்றனர். கையில் காப்புடன் குதிரையில் வரும் விஜய் போன்ற ஒருவர், தனது இரு யானைகளின் மூலம் அந்த கொடுங்கோலர்களை வீழ்த்துகிறார். இப்படியாக பாடல் தொடங்குகிறது.

“தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது” என்ற வரிகள் வருகின்றன. இது எம்ஜிஆரை குறிப்பதாக தெரிகிறது. “சிகரம் கிடைச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு, நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது” என்ற வரிகளின் மூலம் சினிமாவில் கோடிகள் கொட்டும் வருமானத்தை விட்டு அரசியலுக்கு வருவதை குறிப்பிட்டுள்ளார் விஜய்.

பாடலின் நடுவே தவெக கொடியை ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்துவர் ஏந்தி நிற்பதைப் போல ஒரு இடம் வருகிறது. இதன் மூலம் மதநல்லிணக்கமே தனது பாதை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த பாடலின் மூலம் தெரிவித்துள்ளார் விஜய். “அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி”, “தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது” உள்ளிட்ட வரிகள் கவனிக்க வைக்கின்றன. தவெக கொடிப் பாடல் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x