Published : 22 Aug 2024 09:30 AM
Last Updated : 22 Aug 2024 09:30 AM

போர் யானைகளுடன் வாகை மலர்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!

தவெக கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார்

சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக கடந்த 19-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

உறுதிமொழி ஏற்பு: தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. தவெக தொண்டர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி பினவருமாறு: “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” இவ்வாறு அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x
News Hub
Icon