Published : 21 Aug 2024 09:42 PM
Last Updated : 21 Aug 2024 09:42 PM
சென்னை: சிறுவனின் கால் அகற்றப்பட்ட விவகாரத்தில், சென்னை ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனை அங்கீகாரத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை வேளச்சேரி நேரு நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த சின்னையா என்பவரின் 11 வயது மகன் ஹரிகிருஷ்ணன். 7-ம் வகுப்பு படித்து வரும் மகனின் இடது கால் விரலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் பன்னோக்கு மருத்துவமனைக்கு மகனை சின்னையா அழைத்து சென்றுள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர் சரவணன், சிறுவனின் காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை எனவும், சிகிச்சை அளித்தால் சீராகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர், சிறுவனின் காலில் வலி குறையவில்லை. மாறாக, கால் வீக்கம் அடைந்து சில நாட்களில் கால் கருப்பு நிறமாக மாறியுள்ளது. காலில் ரத்தம் ஓட்டம் சீராக இல்லாததால் காலை சரி செய்ய முடியாது. அப்படியே விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். கால் முட்டியில் இருந்து காலை அகற்றிவிட்டால், உயிருக்கு ஆபத்து இல்லை மருத்துவர் கூறியதாக தெரிகிறது. பெற்றோரின் ஒப்புதலை பெற்று, சிறுவனின் கால் அகற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, தவறான சிகிச்சையால் தான் மகனின் கால் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் சின்னையா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சின்னையாவின் புகார் தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி அறிவுறுத்தலின்படி டிஎம்எஸ் அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர்(டிஎம்எஸ்) மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் இன்று மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து மருத்துவமனையின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி கூறுகையில், “தற்காலிகமாக புறநோயாளிகளை பார்க்கக்கூடாது. உள்நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுமாறு தெரிவித்துள்ளோம். சிறுவனுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு சிகிச்சை ஒன்று உள்ளது. அதனை அவர்கள் அளித்திருக்கலாம்.
ஆனால், அதனை செய்யவில்லை. எந்த சிகிச்சை அளித்தாலும், அதற்கான பின்விளைவுகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அதை, அவர்கள் முழுமையாக தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் சில வசதிகளும் இல்லை. மருத்துவமனை தரப்பில் சில தவறுகள் உள்ளன. 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தெரிவித்திருக்கிறோம். அவர்கள் விளக்கம் அளித்து, குறைபாடுகள் அனைத்தையும் சரிசெய்தால், மீண்டும் மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT