Published : 21 Aug 2024 08:07 PM
Last Updated : 21 Aug 2024 08:07 PM
போடி: போடிமெட்டு மலைச் சாலையில் பாறை சரிவுகள் அதிகரித்துள்ளன. ஆகவே, இப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும், முடிந்த வரை இரவு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இந்த வனப்பாதை அமைந்துள்ளது. மழை நேரங்களில் இச்சாலையில் மண் மற்றும் பாறை சரிவுகள் அதிகம் இருக்கும். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெரியளவில் இங்கு மழைப்பொழிவு இல்லை. இந்நிலையில் தற்போது இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தினமும் மழைப்பொழிவு இருப்பதால் மலைச்சாலையின் இருபகுதிகளிலும் உள்ள மண் மற்றும் பாறைத் திட்டுக்கள் அதீத ஈரத்தன்மையுடனே உள்ளது.
இதனால் பாறைகள் பல பகுதிகளிலும் சரிந்து விழுந்துள்ளன. இன்று (ஆக.21) மட்டும் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இரவிலும், அதிகாலையிலும் இதுபோன்ற நிலை தொடர்கிறது. அப்போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பாறைகள் சரிந்து பெரும்பாலும் ரோட்டின் வலப்பக்க ஓரத்திலே விழுகின்றன. இதனால் மலையில் இருந்து கீழிறங்கும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.குறிப்பாக டூவீலரில் செல்பவர்களுக்கு இது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த சில நாட்களாக பாறை சரிவு அதிகரித்துள்ளதால் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதன்படி இயற்கையை ரசிப்பதற்கோ, புகைப்படம் எடுக்கவோ இந்த மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “ஆங்காங்கே லேசான மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டு வருகிறது. ஆகவே முடிந்தவரை இரவில் பயணிக்க வேண்டாம். டூவீலர்களில் செல்பவர்கள் மீது நேரடியாக மண், பாறைகள் விழும் அபாயம் உள்ளது. ஆகவே தலைக்கவசம் அணிந்தே பயணிக்க வேண்டும். முடிந்த வரை இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது,” என்று கூறினா்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT