Published : 21 Aug 2024 08:04 PM
Last Updated : 21 Aug 2024 08:04 PM
கள்ளக்குறிச்சி: “நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள். அவர் அரசியலுக்கு வருவதால் இண்டியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கள்ளகுறிச்சி அருகே சின்னசேலத்தில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (ஆக.21) நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கட்சியை வலிமைப்படுத்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இனிவரும் காலங்களில் இந்த தேசத்தின் குரலாக ராகுல் காந்தியின் குரல் ஒலிக்கும். தமிழகத்துக்கு நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறைக்கு ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதைக் கண்டித்து பொதுமக்களிடம் கையேந்தி ரூ.1,001-ஐ பெற்று மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது.
பங்குச் சந்தையில் மிகப் பெரிய ஊழலை ஆதானி உள்ளிட்டோர் செய்துள்ளனர். கூட்டு பார்லிமென்ட் கமிட்டி அமைத்து என்ன நடந்தது என்று தெரிவிக்க வேண்டும். எதை சொன்னாலும் மாற்றுக் கருத்து சொல்வதுதான் ஜனநாயகமா? நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள். அவர் அரசியலுக்கு வருவதால் இண்டியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
மத்திய அரசுப்பணி நேரடி நியமணம் செய்வதை நிறுத்தி வைத்து இருப்பதற்கு காரணம் நடப்பது பாஜக ஆட்சி இல்லை. இது கூட்டணி ஆட்சியாகும். பாஜகவுக்கு எல்லைக்கோடு உள்ளது. நாணயம் வெளியிடுவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டதற்கு ராகுல் காந்தி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். பாஜக - திமுக கள்ள உறவு வைத்திருப்பதாக சொல்லப்படுவது குறித்து காங்கிரஸுக்கு தெரியாது. நல்ல உறவுப்பற்றி பேசுவோம்” என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமார், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்புச் செயலாளர் ராம்மோகன், பொதுச் செயலாளர் டி.செல்வம், மாநில செயலாளர் .கமலிகா காமராஜர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்துத்துவா எதிர்ப்பு: முன்னதாக, செயல்விரர்கள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை பேசும்போது, “வெறுப்பு அரசியலை செய்து கொண்டிருக்கும் பாசிச, ஆர்எஸ்எஸ் கும்பலை விரட்ட வேண்டும். தேசத்தை காப்பதற்கு இண்டியா கூட்டணியின் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். பாசிச சக்திகளை விரட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். இண்டியா கூட்டணியின் தமிழக தலைவராக இருக்கக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து மதத்தை எதிர்ப்பதிலும், இந்து மதத்தை அனுமதிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். மத நல்லிணக்கத்துக்கு உறுதுணையாக இருப்பவர்கள் தான் இண்டியா கூட்டணியின் தலைவர்கள்,” என்று பேசினார். இதுகுறித்து கட்சியின் அமைப்புச் செயலாளர் ராம் மோகனிடம் கேட்டபோது, “இந்துத்துவா எதிர்ப்பு என்று சொல்வதற்கு பதிலாக வாய்தவறி தவறுதலாக பேசிவிட்டார்,” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT