Published : 21 Aug 2024 08:09 PM
Last Updated : 21 Aug 2024 08:09 PM
தென்காசி: பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயில் நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம் வழியாக பாலக்காட்டுக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை திருநெல்வேலியில் இருந்து துறைமுக நகரமான தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே வாரியம் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் முதல் முறையாக தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு பொதுமக்களும் ரயில் பயணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா அனுப்பி உள்ள கடிதத்தில், "பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பதற்கு நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைத்து தற்போது 18 பெட்டிகளுடன் பாலருவி எக்ஸ்பிரஸ் இயங்கி வருவதால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பால் திருநெவேலி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியும் சற்று குறைந்தது. இதனால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. செங்கோட்டை-புனலூர் இடையே மின்மயமாக்கல் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டதால் திருநெல்வேலி- கொல்லம் நேரடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாண்டியராஜா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT