Published : 21 Aug 2024 06:11 PM
Last Updated : 21 Aug 2024 06:11 PM
அரியலூர்: பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டவர் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
அரியலூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் மூலம் சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகளை தொடங்கி வைத்துள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவுற்ற பிறகு மின்சார பேருந்துகள் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு தேவையான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் கையடக்க கருவியோடு டிக்கெட் வழங்குகின்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும், மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆக வேண்டும் என காத்திருக்கிறோம். முதல்வர்தான் நடவடிக்கை எடுப்பார்.
பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாதான் தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கானவர். உதயநிதி செயல்பாட்டை மக்கள் அறிவர். அதனால்தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார். ஹெச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர். அவர் அடிப்படை அரசியல் தெரியாமல் முதல்வரானார். நாணயம் வெளியீடு என்பது ஓர் அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது மத்திய அரசு, மாநில அரசு இணைந்த பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
எடப்பாடியைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு கூட விழா எடுக்காமல் போனவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும். காய்ச்ச மரம் கல்லடி படும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம். அதுபோல சீமான் விமர்சிக்கிறார். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கித் தள்ளப்படுவார்கள்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT