Published : 21 Aug 2024 03:05 PM
Last Updated : 21 Aug 2024 03:05 PM
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட காரணங்களால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 985 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: "ஆக.24, 25 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு), ஆக.26 கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆக.23, 24 தேதிகளில் 485 பேருந்துகள், ஆக.25, 26 (கிருஷ்ண ஜெயந்தி) தேதிகளில் திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆக.23, 24 தேதிகளில் 70 பேருந்துகளும், இதே தேதிகளில் மாதவரத்தில் இருந்து மேற்கூறிய இடங்களுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 985 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அதே நேரம், திங்களன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள்: "இது ஒரு புறமிருக்க, வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு 1050 சிறப்பு பேருந்துகள் ஆக.27 முதல் செப்.10-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன" என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT