Last Updated : 21 Aug, 2024 02:39 PM

6  

Published : 21 Aug 2024 02:39 PM
Last Updated : 21 Aug 2024 02:39 PM

32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது விருதுநகர் புதிய பேருந்து நிலையம்!

விருதுநகர்: பெரும் எதிர்பார்ப்புடன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு 32 ஆண்டுகளைக் கடந்தும் பேருந்துகள் வருகை இல்லாததால் வெறிச்சோடிக் கிடந்த விருதுநகர் புதிய பேருந்து நிலையம் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த விருதுநகர் கடந்த 1985-ல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. தற்போது விருதுநகரின் மையப் பகுதியில் இயங்கி வரும் பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு போதாது என்பதாலும், வெளியூர் பேருந்துகள் வந்து செல்ல வசதியாக இருக்கவும் விருதுநகர் சாத்தூர் சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டத் திட்டமிட்டு அதற்காக கடந்த 8.10.1989-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர், கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 3.5.1992ல் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் குணாளன் தலைமையிலும், பொதுப்பணித் துறை அமைச்சர் எஸ்.கண்ணப்பன் முன்னிலையிலும் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த அழகு திருநாவுக்கரசு விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்துவைத்தார்.

சில நாள்கள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின்னர், புதிய பேருந்து நிலையம் செயல்பாடற்ற நிலைக்குச் சென்றது. போதிய பராமரிப்பு இல்லாததால் சாலைகள் சேதமடைந்தன. அதனால், விருதுநகர் நகராட்சி ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 2006ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தில் கான்கிரீட் ஓடுதளம் அமைக்கப்பட்டு கட்டிடங்களும் புணரமைக்கப்பட்டன. ஆனால், அதன் பின்னரும் பேருந்துகள் வருகையின்றி காட்சிப் பொருளாகவே காணப்பட்டது.

மதுரையிலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவில்பட்டி செல்லும் பேருந்துகள் பைபாஸ் சாலையிலேயே இயக்கப்பட்டன. வெளியூர் செல்லும் பேருந்துகள் விருதுநகருக்குள் வருவதில்லை. இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், வெளியூர் பேருந்துகள் அனைத்தும் விருதுநகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்பதாக அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வராததால் பயன்பாடில்லாமலும் பராமரிப்பில்லாமலும் கைவிடப்பட்டது.

தற்போது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முயற்சி எடுத்தனர். இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று புதிய பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கியது. விருதுநகர் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், விருதுநகரிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கணக்கிடப்பட்டு, அவை விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று (21ம் தேதி) முதல் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் அறிவித்தார்.

அதன்படி, விருதுநகர் புதிய பேருந்து நிலையம் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திட்டமிட்ட படி குறிப்பிட்ட வழித்தடங்களில் அனைத்து வெளியூர் பேருந்துகளும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வந்து செல்கின்றன. இதற்காக பைபாஸ் சாலையில் கணபதி மில் விலக்கு பகுதியில் போக்குவரத்து போலீஸார், அரசு போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நிறுத்தப்பட்டு, அனைத்து வெளியூர் பேருந்துகளும் எம்.ஜி.ஆர். சாலை வழியாக விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு திருப்பிவிடப்படுகின்றன.

அதோடு, புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்து வழித்தடங்கள் குறித்த விவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதையும் நடத்துநர் கையெழுத்திடுவதையும் கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேருந்த வழித்தடங்கள் அனைத்தும் வெளியூர் பேருந்துகள் வரத் தொடங்கியுள்ளதால் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x