Last Updated : 21 Aug, 2024 02:10 PM

 

Published : 21 Aug 2024 02:10 PM
Last Updated : 21 Aug 2024 02:10 PM

சாத்தூரில் மழைநீர் தேங்கும் சாலையோர பள்ளங்கள் - கைக்குழந்தைகளுடன் தவறி விழுந்த 3 பெண்களுக்கு காயம்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சாலை ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆழம் தெரியாமல் பலர் இக்குழுகளில் விழுந்து காயமடைந்தனர். நேற்று மாலை கைக்குழந்தைகளுடன் சாலையை கடந்து வந்த 3 பெண்கள் பள்ளத்துக்குள் விழுந்து காயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலைத் துறையினரால், வாறுகால் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், பேவர் பிளாக் பதித்தல், போன்ற பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனால் சாத்தூர் நகர் பகுதிகளில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இவை மூடப்படாமல் உள்ளதால் பலர் இதில் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

சாத்தூர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளன. நேற்று சாத்தூர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததது. இதனால் சாத்தூர் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடை அருகே 3 பெண்கள் கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றபோது, சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் தவறி விழுந்தவர்களை உடனடியாக மீட்டனர். சற்று நேரத்தில் அதே பகுதியை முதியவர் ஒருவரும் தவறி அப்பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். இது போன்ற விபத்துகளை தடுக்க மழைக் காலங்களில் சாலைகளை அகலப்படுத்தும் பணிக்காக குழிகள் தோண்டப்படும் போது, அவ்விடத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x