Last Updated : 21 Aug, 2024 12:20 PM

1  

Published : 21 Aug 2024 12:20 PM
Last Updated : 21 Aug 2024 12:20 PM

ரூ.51,157 கோடியில் 28 வகை திட்டங்கள் மூலம் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தமிழக இளைஞர்களின் திறமைகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தொழில் துறையினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக தொழில் துறையின் தொழில் வழிகாட்டி நிறுவனம் சார்பில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு முதலீட்டு மாநாடு, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ரூ.68,773 கோடி மதிப்பிலான 19 திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், 27 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.9.94 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தம் போட்டதுடன் நின்று விடாமல் அந்த நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க ஆதரவு சேவைகள் அளித்து வருகிறோம். முன்னேற்றத்தை கண்காணித்து, திட்டங்கள் தொடர்ந்து செயலாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, 19 வகையான திட்டங்களை ரூ.17,616 கோடி மதிப்பில் தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் 62,968 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல், 28 வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.51,157 கோடியாகும். இதன் மூலம் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில் வளர்க்கும் நிறுவனம் மூலம் மாநிலம் வளரும். வேலைவாய்ப்பு மூலம் குடும்பம் வளரும். அந்த வகையில் வளர்ச்சிக்கான குறியீடாக தொழில் உள்ளது. அமைதியான சட்டம் - ஒழுங்கு உள்ள மாநிலத்தை தொழில் துறையினர் தேடி வருவார்கள். தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்பதால் தான், கடந்த 3 ஆண்டுகளாக அதிகளவிலான தொழில் நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன.

தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொழில் நிறுவனங்களை தொடங்கினால் மட்டும் போதாது. உங்களைப்போன்ற தொழிலதிபர்களையும் தமிழகத்துக்கு அழைத்து வந்து தொழில் தொடங்க செய்யுங்கள். தமிழக தொழில்துறை தூதுவர்களாக நீங்கள் மாற வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற தொழில்திட்டங்களை தமிழகம் ஈர்த்துள்ளது. 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடையும் முயற்சியில் தமிழகம் உள்ளது. இன்று மோட்டார் வாகனங்கள், மருத்துவ உபகரணம், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நான் தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம், 1,06,803 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதில் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவையாகும்.

அனைத்து துறை, அனைத்து சமூக, அனைத்து மாவட்ட வளர்ச்சியை உறுதி செய்து வருகிறோம். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் தொடங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதிகள் சமூக பொருளாதார வளர்ச்சி பெறும். திறன் மிக்க தொழிலாளர்கள், அதிக பெண் தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் தமிழகம். பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பதை உலகம் அறிந்துள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வாழ்க்கை வசதி என்பதே அரசின் குறிக்கோள். இதை செயல்படுத்துவதுதான் எங்கள் முயற்சி. மிகுந்த திறமையும், படைப்பாற்றலை கொண்டவர்கள் தமிழக இளைஞர்கள். இவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். எனவே, எங்கள் இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தொழில்துறையினரை கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x