Published : 21 Aug 2024 10:59 AM
Last Updated : 21 Aug 2024 10:59 AM
சென்னை: சென்னையில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு, நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறிப்பதா? என அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மாநகராட்சியின் ராயபுரம் (5), திரு.வி.க. நகர் (6) ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கு வசதியாக அந்த இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தற்காலிக துப்புறவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. மிகவும் நெருக்கடியாக காலத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது; கண்டிக்கத்தக்கது.
பணி நீக்கப்படவுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருபவர்கள். கொரோனா பெருந்தொற்று மற்றும் பேரிடர் காலங்களில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியவர்கள். கரோனா காலத்தில் துப்புரவு பணியாளர்கள் 13 பேர் பணியில் இருக்கும் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். அவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் கூட மதிக்காமல் பணி நீக்கம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டிருப்பது மனிதநேயமற்ற செயலாகும்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அவற்றில் 11 மண்டலங்களில் தூய்மைப்பணி ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 4 மண்டலங்களில் இரண்டை தனியாருக்கு தாரைவார்க்க திமுக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் அரசுக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் இல்லை.
மாறாக, இதற்காக செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தால் ஆட்சியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் பலனைக் கருத்தில் கொண்டு தான் தூய்மைப் பணி தனியார்மயமாக்கப்படுகிறது. ஆட்சியாளர்களின் நலன்களுக்காக தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பலி கொடுக்கப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சென்னையில் பல மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டதால் 700 பணியாளர்கள் நீக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பணி நீக்கப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் பட்டியலினத்தவர் என்பதால் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்.
இன்று அவரே முதலமைச்சராகியுள்ள நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நீக்கப்படுகின்றனர். அதிகாரம் என்ற போதை கண்ணை மறைப்பதால், பணி நீக்கப்படுபவர்கள் பட்டியலினத்தவர்கள் என்ற உண்மை அவருக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் தூய்மைப் பணியாளர்கள் இப்போது பணி நீக்கப்பட மாட்டார்கள்; மாறாக வாழ்வாதார உத்தரவாதம் பெற்று வசதியாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், திமுக சொன்னதை செய்யவில்லை. திமுக அரசின் இரட்டை வேடத்திற்கு கொடுமையான எடுத்துக்காட்டு இது தான்.
சமூகத்தின் அடித்தட்டு மக்கள் தூய்மைப் பணியாளர்கள் தான். சமூகநீதிக்காகவே ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடித்தட்டு மக்களை பணிநீக்கம் செய்வது சமூக அநீதி என்பதை உணர வேண்டும். சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கும் முடிவைக் கைவிட்டு, அவர்களுக்கு பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT