Published : 21 Aug 2024 05:05 AM
Last Updated : 21 Aug 2024 05:05 AM

மின்வாகனங்களுக்கான சார்ஜர் தயாரிக்கும் சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு தேசிய தரச்சான்று

சென்னை: மின்வாகனங்களுக்கு தேவைப்படும் சார்ஜர்களைத் தயாரிக்கும் சென்னை ஐஐடி ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடி புத்தாக்க தொழில்நிறுவனமான (ஸ்டார்ட்-அப்) பிளக்ஸ்மார்ட் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மின்வாகனங்களுக்குத் தேவைப்படும் சார்ஜர்களைத் தயாரித்து வருகிறது. 60 கிலோவாட் திறன் கொண்ட இந்த சார்ஜர்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

இந்நிலையில், பிளக்ஸ்மார்ட் நிறுவனத்தின் சார்ஜர்களின் தரத்தையும் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் தரச்சான்றினை வழங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி சங்கம் மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் மற்றும் ஆட்டோமோட்டிவ் தொழில்துறையின் கூட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சார்ஜர்களுக்கு தேசிய அளவில் தரச்சான்று கிடைத்திருப்பது இத்துறையின் வளர்ச்சியை பெரிதும் ஊக்குவிக்கும். பசுமை எரிசக்தியை நோக்கி இந்தியா முன்னேறி வருவதால் மின்வாகனங்களுக்கான சார்ஜர்களின் தயாரிப்பு துறை மேலும் வளரும்.

தேசிய தரச்சான்று கிடைத்திருப்பது குறித்து பிளக்ஸ்மார்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் அலுவலர் விவேக் சாமிநாதன் கூறும்போது, “தரத்துக்கும் பாதுகாப்புக்கும் கிடைத்திருக்கும் அங்கீகாரமாகவே இந்த தரச்சான்றைக் கருதுகிறோம்.

மின்வாகனங்களுக்கான சார்ஜர்கள் தயாரிப்பு துறையில் முன்னணியில் திகழ விரும்புகிறோம். இந்த ஆண்டு பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம்” என்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x