Published : 20 Aug 2024 05:59 PM
Last Updated : 20 Aug 2024 05:59 PM

பர்கூர் வன்கொடுமை எதிரொலி: தனியார் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ் முகாம்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகள்

சென்னை: பர்கூர் அருகே என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் எதிரொலியாக, தனியார் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ் முகாம்கள் நடத்த பள்ளிக் கல்வித் துறை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற என்சிசி முகாமில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ் முகாம்கள் நடத்த பல்வேறு புதிய கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் எம்.பழனிசாமி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: > மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, உள்ளிட்ட தனியார் சுயநிதி பள்ளிகளில் என்எஸ்எஸ், என்சிசி, சாரணியர் இயக்கம், ஜேஆர்சி உள்ளிட்ட அமைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளின் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாக பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

> அவற்றின் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். அவ்வாறு முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது.

> மேற்கண்ட அமைப்புகளின் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும்போது மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களும், மாணவிகளுக்கு ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.

> மாநில அமைப்பால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே பயிற்சி முகாம் நடத்தப்பட வேண்டும்.

> அமைப்புகளின் செயல்பாடுகள் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் போது உரிய அமைப்பின் (என்எஸ்எஸ், என்சிசி, ஜேஆர்சி ) மாவட்ட அல்லது மாநில பொறுப்பாளர்களின் கடிதத்தின் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரிக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

> மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பயிற்சி முகாமும் நடத்த ஏற்பாடு செய்யக்கூடாது.

> பள்ளி அளவிலோ, மாவட்ட மற்றும் மாநில அளவிலோ முகாம்கள் நடத்தும்போது மாணவர்கள் பாதுகாப்புக்கு ஆண் ஆசிரியர்களும், மாணவிகளின் பாதுகாப்புக்கு ஆசிரியைகளும் சம்பந்தப்பட்ட அமைப்பின் விதிமுறைகளின்படி போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும்.

> ஆசிரியர்களின் பாதுகாப்பு இல்லாமல் எந்தவொரு அமைப்பு சார்பாகவும், மாணவ, மாணவிகளை முகாம்களில் ஈடுபடுத்தக் கூடாது.

> மேலும், பயிலும் பள்ளியிலோ அல்லது வெளியிடங்களிலோ முகாம் நடத்தப்பட வேண்டியிருந்தால் ஒவ்வொரு மாணவ , மாணவியின் பெற்றோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன்பிறகே மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

> பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் மாணவ, மாணவிகளை முகாம்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்பதை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x