Published : 20 Aug 2024 03:19 PM
Last Updated : 20 Aug 2024 03:19 PM

அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 2,228 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறை பணியிடங்களுக்கு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் உட்பட மொத்தம் 2,228 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.20) வழங்கினார். அப்போது துறை அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இந்த பணிநியமன ஆணைகளை வழங்கப்பட்டன.

நிதித்துறை: நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கருவூலக் கணக்குத் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கணக்கர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 537 நபர்களுக்கும், கருவூலக் கணக்குத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக மருந்தாளுநர் பணியிடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 946 நபர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக உதவியாளர் பணியிடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 523 நபர்கள் மற்றும் தொழில் வழிகாட்டி ஆலோசகர் பணியிடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 5 நபர்கள், என மொத்தம் 1,474 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை: இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சுப்பணியில் உதவியாளர் பணியிடத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

மீனவர் நலத்துறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 35 உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர் 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வுகளின்போது, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள், துறை செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x